அந்த தம்பதி தங்கள் மூன்று பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சந்நிதி தெரு வீட்டிற்கு சுவாமி யோகி ராம்சுரத்குமார் தரிசனத்திற்காக வந்தனர்.
அந்த தம்பதி தங்கள் மூன்று பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சந்நிதி தெரு வீட்டிற்கு சுவாமி யோகி ராம்சுரத்குமார் தரிசனத்திற்காக வந்தனர்.
ஆறிலிருந்து பத்து வயது வரை உள்ள குழந்தைகள், கணவன், மனைவி, என எவர் முகத்திலும் சந்தோஷமோ, திருப்தியோ, அமைதியோ இல்லை.
அவர்கள்
அனைவரும் எதையோ இழந்தவர்கள் போல் காணப்பட்டனர்.
சுவாமி அவர்களை அமர வைத்தார். அப்பெண்மணியையும் அவரது மகள்களையும் பெண்கள் அமரும் பகுதியிலும், கணவனை சுவாமி தனக்கு நேரெதிராகவும் அமர வைத்தார்.
கணவர் அமர்ந்த சில நிமிடங்களிலே கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். அப்பெண்ணின் கண்களில் கண்ணீர் பெருகியது.
அவர் கேவிக் கேவி அழத் தொடங்கினார். தாய் அழுவதைக் கண்ட குழந்தைகளும் அழத் தொடங்கின.
சுவாமி அமைதியாக சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். அவரின் தீட்சண்யமான பார்வை அந்த பெண்ணின் கணவரின் மீதே படிந்திருந்தது.
சுவாமியின் பார்வையின் உக்கிரத்தால் அந்த நண்பர் தன் விழிகளைத் திறந்து பார்த்தார்.
சுவாமி தன்னையே உற்று நோக்குவதை அறிந்த பக்தர் மெதுவாக எழுந்து சுவாமியை நமஸ்கரித்தார்.
சுவாமி அமானுஷ்யமான மௌனம் காத்தார். பக்தர் தன் இடத்தில் அமர்ந்தார்.
“சுவாமி இவர் எப்பொழுதும் கண்களை மூடியபடி தியானம் செய்து கொண்டே இருக்கிறார். யாரிடமும் பேசுவதில்லை. தொழிலையும் கவனிப்பதில்லை. குழந்தைகளைப் பார்ப்பதே இல்லை. காரணம் கேட்டால் தான் பகவானை அடையத் தவம் இருப்பதாகச் சொல்கிறார் சுவாமி. எனக்கு பயமாக இருக்கின்றது சுவாமி.”
நாத்தழுதழுக்க அப்பெண்மணி கூறினார்.
சுவாமி எதுவும் சொல்லவில்லை. பக்தரையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“மனித வாழ்வின் லட்சியமே பகவானை அடைவதுதானே சுவாமி. பகவானைத் தியானித்திருந்தால் பகவான் நம் காரியங்கள் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்பது இவர்களுக்குப் புரியவில்லை சுவாமி.”
இளக்காரமாகப் பக்தர் தன் குடும்பத்தினரைப் பார்த்துச் சிரித்தார்.
சுவாமி அமைதியாக அவர்களையே மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
சுவாமி மீண்டும் மீண்டும் சிகரெட் பிடித்தபடி இருந்தார். சுவாமியின் கவனமெல்லாம் அந்த பக்தரின் மீதே இருந்தது.
“என் தந்தை எந்தச் சூழ்நிலையில் நம்மை வைத்திருக்கின்றாரோ அந்த நிலையில் நாம் முழுமையாக ஒன்றியிருக்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் என் தந்தையாகப் பாவிக்க வேண்டும். அன்போடு அனைவரையும் அரவணைத்து வாழ்ந்தால், நாம் தந்தையைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. என் தந்தையே நம்மை நாடி வருவார். எவரையும் வெறுத்து ஒதுக்குவது அல்ல தவம். அனைத்தையும், அனைவரையும் அன்போடு அரவணைத்தலே தவமாகும்.”
சுவாமியின் வார்த்தைகளைக் கேட்ட பக்தரின் முகம் வாடியது.
சுவாமி அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.
பல நாள் உபவாசமும், பிரமச்சரிய பிடிவாதமும் அப்பக்தரின் தேகத்தைப் பலஹீனமாக்கியிருந்தது. அவர் அப்படியே தான் அமர்ந்திருந்த பாயில் சரிந்து மயங்கினார்.
அவரது மனைவியும், மகள்களும் பயந்து கூச்சலிட்டனர்.
சுவாமி படுத்திருந்த பக்தர் அருகில் சென்றார். அவர் நெற்றியை தன் கையால் வருடினார். பக்தர் மயக்கம் நீங்கி அமர்ந்தார்.
சுவாமி அவரை அவர்கள் தங்கியிருந்த சிவகாசி சத்திர அறைக்கு மனைவியை அழைத்துக் கொண்டு சென்று ஓய்வெடுத்துவிட்டு வரச் சொன்னார்.
குழந்தைகள் தன்னிடமே இருக்கட்டும் என்று சுவாமி சொல்ல தம்பதியர் மட்டும் தங்கள் அறைக்குச் சென்றனர்.
குழந்தைகளும் மற்ற பக்தர்களும் சுவாமியின் நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தோம்.
சுமார் இரண்டு மணி நேரம் கழித்து தம்பதியர் சுவாமியிடம் வந்தனர். திருவடி பணிந்தனர். தம்பதியர்களின் முகம் பூரித்திருந்தது.
சற்று நேரத்தில் சுவாமி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார்.
அன்றிலிருந்து அந்தத் தம்பதி சுவாமியின் நினைவோடு இணை பிரியாமல் வாழ்ந்தனர்.
முதுமையில் மனைவி தன் கணவன் மடியிலே தன்னுயிரை நீத்தார். அடுத்த ஆறு மாதங்களில் கணவரும் காலமானார்.
“இந்த பிச்சைக்காரன் தந்தையை எப்பொழுதும் நினைத்திருப்பதற்காகத் தன் குடும்பத்தை விட்டு ஓடி வந்துவிட்டான். ஆனால் என் நண்பர்களான நீங்கள் தந்தையை எப்பொழுதும் நினைத்திருந்தாலும் குடும்பத்தோடு சேர்ந்தே இருக்கின்றீர்கள். இந்த பிச்சைக்காரன் செய்த தவறை நீங்கள் யாரும் செய்யவில்லை.”
பின்னொரு நாளில் சுவாமி இவ்விதம் கூறினார்.
வாழ்க எம்மான் யோகி ராம்சுரத்குமார்.