Miracles admin  

“அம்மா, இதோ பார்த்தீர்களா, இந்த படத்தின் மேல் இரு முனையிலும், நடுவிலும் மூன்று சிறு ஆணிகள் சொருகப் பட்டுள்ளது.

“அம்மா, இதோ பார்த்தீர்களா, இந்த படத்தின் மேல் இரு முனையிலும், நடுவிலும் மூன்று சிறு ஆணிகள் சொருகப் பட்டுள்ளது. இவைகள் இப்படத்திற்கு புஷ்பங்கள் அணிவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதில் புஷ்ப சரத்தை மாட்டி, பின்பு படத்திற்கு ஊதுபத்தி காட்டி வழிபட வேண்டும் அம்மா. தெரிந்து கொண்டீர்களா?”

சுவாமி யோகி ராம்சுரத்குமார் தனது படித்துறைப் படத்தை அந்த இளம் மாதிடம், தனது படத்தை வழிபடும் முறையை விவரித்தார்.

அந்தப் படம் அண்ணாமலையார் கோவிலின் சிவகங்கை தீர்த்தப் படிக்கட்டில் சுவாமியை நிற்க வைத்து ஒரு நண்பர் எடுத்தது. எனவே அது படித்துறைப் படம் என்று பெயர் பெற்றது.

இப்படத்தைப் பிரிண்ட் செய்ய பெங்களூர் திரு.ஜனார்த்தனத்திற்கு மட்டுமே சுவாமி அனுமதி அளித்திருந்தார். அவர் பிரிண்ட் செய்து வந்த படங்களுக்கு சுவாமி விவரமாக சந்நிதித் தெரு வீட்டின் கூடத்தின் வடக்குச் சுவரில் கணக்கு எழுதி வைத்திருந்தார்.

வந்த படங்களின் விவரமும், சுவாமியினால் விநியோகிக்கப்பட்ட படங்களின் கணக்கும் அச்சுவரில் எழுதப்பட்டிருந்தது.

அப்படத்தில் சுவாமியின் முகம் நமது மனநிலைக்கும், நாம் அன்று செய்த காரியங்களுக்கும் தகுந்தவாறு வெவ்வேறு பாவனைகளை வெளிப்படுத்தும். இன்று வரை அப்படங்கள் சிரித்தவாறும், ஒருவித மோனத்திலும், கோபமாகவும், அளவற்ற அமைதியோடும், நம்மையே உற்றுப் பார்த்தவாறும், இன்னும் எத்தனையோ பாவனைகளை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறது.

இப்படத்தை சுவாமி அம் மாதிடம் அளித்தபோது அங்கிருந்த ஒரு ஐரோப்பியர் மிகுந்த ஆச்சரியம் அடைந்தார்.

அவர் அதுவரை சுவாமியின் அத்வைத நிலையை மட்டுமே தரிசித்திருந்தார். சுவாமியின் இந்த துவைத நிலை அவர் அறியாதது.

“சுவாமி, நீங்கள் எதில் லயித்துள்ளீர்கள்? அத்வைதத்திலா அன்றி துவைதத்திலா? எனக்கு புரியவில்லை சுவாமி.”

அந்த ஐரோப்பியர் குழப்பத்துடன் சுவாமியிடம் கேட்டார்.

சுவாமி அழகாக புன்னகைத்தார். சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்து ஆழ்ந்து புகை பிடித்தார்.

“இந்த பிச்சைக்காரன் அத்வைதத்திற்கும், துவைதத்திற்கும் மத்தியில் எங்கோ இருக்கிறான்.”

இப்படிச் சொல்லிவிட்டு சுவாமி ஆனந்தமாகச் சிரித்தார்.

“லோக தர்மத்தைச் செய்யும்போது துவைதத்திலும், என் தந்தையோடு இணைந்திருக்கும்போது அத்வைதத்திலும் இந்த பிச்சைக்காரன் சஞ்சாரம் செய்கின்றான். என் தந்தையின் வேலையைச் செய்ய வேண்டும் நண்பா. செய்த பிறகு என் தந்தையோடு நீக்கமற கலந்திருக்க வேண்டும் நண்பா.”

அந்த ஐரோப்பியர் ஏதும் புரியாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

சுவாமியின் படித்துறைப் படத்தைப் பெற்ற மாது குழந்தை வரத்திற்காக சுவாமியிடம் வந்தவர். சுவாமியிடம் படத்தைப் பெற்ற ஒராண்டில் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

யோகி ராமசுரத்குமரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா.

Leave A Comment