Miracles admin  

ஒரு காலைப் பொழுது. திருவண்ணாமலை பூக்கடையில் அவன் நான்கு அணாவிற்கு புஷ்பம் வாங்கினான். மற்றொரு கடையில் ஒரு எலுமிச்சை பழம் வாங்கினான்.

ஒரு காலைப் பொழுது. திருவண்ணாமலை பூக்கடையில் அவன் நான்கு அணாவிற்கு புஷ்பம் வாங்கினான். மற்றொரு கடையில் ஒரு எலுமிச்சை பழம் வாங்கினான்.

நேராக சுவாமி யோகி ராம்சுரத்குமார் இருக்கும் சந்நிதித் தெரு வீட்டிற்குச் சென்றான். வீட்டின் இரும்புக் கதவை சற்று மெதுவாகத் தட்டினான்.

அவன் தன் வாழ்வில் தானாகவே பல சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டவன். அந்த சிக்கல்கள் அவனை மீள முடியாத அளவு இறுகக் கட்டிவைத்து திணறடித்த போது அதிலிருந்து விடுபட கடுமையாக முயற்சித்தும் அவனால் இயலாத அவல நிலை.

தெய்வ நம்பிக்கை அவனுக்கு சிறிது இருந்தும் அவனால் பிரார்த்தனை செய்ய முடியவில்லை. தெளிவாக சிந்திக்கவோ, பொறுமையாக எச்செயலையும் செய்யவோ முடியவில்லை.

தெளிவும், பொறுமையும் இல்லாததால் அவன் வாழ்வின் சிக்கல்கள் மேலும் பல முடிச்சுகள் விழுந்து அதிலிருந்து விடுபடவே முடியாது தவியாய் தவித்து வந்தான்.

நம் சுவாமியை சில காலமாகவே அவன் அறிந்திருந்தான். அன்று சுவாமியைத் தரிசிக்க சந்நிதித் தெரு வீட்டிற்கு வந்தான்.

சுவாமி வீட்டினுள் இருந்து வெளியே வந்தார். இரும்புக் கதவிற்கு வெளியில் நின்றவனைச் சற்று நேரம் உற்று நோக்கினார். பின்னர் கதவைத் திறந்தார். அவன் கையை வாஞ்சையோடு பற்றி அவனை உள்ளே அழைத்துச் சென்றார்.

கூடத்தில் பல பக்தர்கள் பரவசத்துடன் சுவாமியின் நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தனர். சுவாமி அவரிடத்தில் அமர்ந்துகொண்டார். அவன் தான் கொண்டு வந்த மந்தார இலையில் கட்டப்பட்ட புஷ்பத்தையும், எலுமிச்சை பழத்தையும் சுவாமியின் திருவடியில் வைத்து நமஸ்கரித்தான்.

சுவாமி அவன் முதுகை வாஞ்சையோடு வருடி மெதுவாக சில தடவைகள் தட்டினார். சுவாமி அவனைத் தன் எதிரே அமரவைத்தார்.

அவன் வாங்கிவந்த புஷ்ப பொட்டலத்தை சுவாமி முகர்ந்து பார்த்தார். பின்னர் அப்பொட்டலத்தைச் சுற்றியுள்ள நூலைப் பிரிக்க முயன்றார்.

நூல் சிக்கலாகிக் கிடந்தது. சுவாமி பொறுமையாக நூல் சிக்கலைப் பிரிக்க முயற்சித்தார்.

சிக்கல்கள் தீவிரமாக இருந்தது. சுவாமிக்கு கூடத்தில் வெளிச்சம் போதவில்லை. மெதுவாக எழுந்து கூடத்தின் பின்புறம் சூரிய வெளிச்சம் பிரகாசமாக இருக்கும் இடத்தில் அமர்ந்து பூப்பொட்டலத்தின் மேல் கட்டப்பட்ட நூல் சிக்கலை அவிழ்க்க முயற்சித்தார்.

உள்ளே பக்தர்கள் நாமம் பாடியபடி இருந்தனர். சுவாமி நூல் அறுந்து போகாமல் சிக்கலைப் பிரிக்க, விடாது முயற்சித்தவாறு இருந்தார்.

நேரம் கடந்தவாறு இருந்தது. சுமார் ஒரு மணி நேரம் கடந்திருக்கும்.

முடிவில் சுவாமி நூல் அறுந்து போகாமல் சிக்கல்களைப் பிரித்து உள்ளே இருந்த புஷ்பத்தை வெளியே எடுத்தார். அந்த நூலை சிக்கலாகாமல் அழகாகச் சுற்றி அவரின் பின்புறமிருந்த ஜன்னலின் மரச்சட்டத்தில் பத்திரப்படுத்தினார். இலையை ஜன்னலின் கம்பியின் இடையில் சொருகி வைத்தார்.

சுவாமியின் முகமலர் மலர்ந்தது. பேரானந்தத்துடன் கூடத்துள் நுழைந்தார். அவனெதிரே நின்றார்.

அந்தக் கதம்பப் பூச்சரத்தைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டார். சுவாமி ஆனந்தமாகச் சிரித்தார்.

அவன் கண்களில் நீர் வடிந்தது. அவன் இதயத்தில் இனமறியா பரவசமும் பாதுகாப்பான உணர்வும் தோன்றியது.

சுவாமி அவனுக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.

அவன் வாழ்வின் முடிச்சுகளும், சிக்கல்களும் காலப்போக்கில் விடுபட்டுச் சென்றன.

சுவாமி அவனை என்றென்றும் அவரை நினைத்து வாழவைத்தார். அவன் இன்றும் சுவாமியின் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

யோகி ராம்சுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா.

Source – https://www.facebook.com/parthasarathy.sannasi

Leave A Comment