Miracles admin  

ஒரு முறை ஒரு அன்பர் தான் வட இந்தியாவில் உள்ள ஜம்முதவி என்ற ஊருக்குச் சென்று வந்ததாகக் கூறினார்.

சுவாமி யோகி ராம்சுரத்குமாரின் சாதனா காலத்தில், சுவாமி இந்த பாரத தேசம் முழுவதும் சஞ்சாரம் செய்தார். சுவாமி தேச சஞ்சாரம் செய்த விவரங்கள் சுவாமி சொல்லிய ஒரிரு சம்பவங்களை தவிர வேறு எதுவும் அறியப்படாத ரகசியங்களாகவே இருந்து வருகிறது.

ஒரு முறை ஒரு அன்பர் தான் வட இந்தியாவில் உள்ள ஜம்முதவி என்ற ஊருக்குச் சென்று வந்ததாகக் கூறினார்.

அன்பர் கூறியதைக் கேட்ட சுவாமி வெகு நேரம் மௌனம் காத்தார். தொடர்ந்து சிகரெட் பிடித்தபடி இருந்தார். அவர் விழிகளில் ஏனோ நீர் கசிந்தது.

“இந்த பிச்சைக்காரன் உன்மத்த நிலையில் தேச சஞ்சாரம் செய்த போது ஒரு நாள் ஜம்மு சென்றடைந்தான்.

அங்குள்ள வீதிகள் யாவும் நெடிய ஏற்றமாகவும், இறக்கமாகவும், இருக்கும். அந்த வீதியில் இந்த பிச்சைக்காரன் ஒருநாள் நடந்து சென்று கொண்டிருந்தான்.

எதிரே ஏற்றத்தில் ஒரு ஒற்றை மாட்டு வண்டி மிகுந்த பாரம் ஏற்றப்பட்டு அந்த மேடான சாலையில் மெதுவாகத் திணறித், திணறி வந்து கொண்டிருந்தது.

வண்டிக்காரன் வண்டியில் இருந்து கீழே இறங்கி பெருங் கூச்சலோடு, கையில் வைத்திருந்த பருமனான குச்சியால் மாட்டின் முதுகிலும், முகத்திலும் மாறி மாறி அடித்து மாடு துரிதமாக அந்த மேடான சாலையை கடக்க ஆத்திரத்துடன் முயற்சித்துக், கொண்டிருந்தான்.

மாடு திணறியது. ஒவ்வொரு அடியும் எடுத்து முன் செல்ல பெரும் வலியோடு முயற்சித்தது.

சில சமயத்தில் அந்த ஏற்றத்தில் ஏறும்போது அதன் பின்னங்கால்கள் வேறு சறுக்கித் தடுமாறியது. வண்டிக்காரனோ மாட்டை அடிப்பதை நிறுத்தவே இல்லை.

இந்த பிச்சைக்காரன் சாலையில் இருந்த ஒரு பெரிய கல்லை அந்த மாட்டு வண்டி சக்கிரத்தின், பின்பக்கம் வைத்து மாடு சறுக்காமல், செல்ல வைத்தான். மாட்டுக்காரனிடம் மாடை, அடித்துத் துன்புறுத்த வேண்டாம் எனக் கெஞ்சினான். சிறிது நேர ஓய்வுக்கு பின் மாடு பாரத்தை இழுத்துச் சென்று விடும் எனக் கூறினான்.

மாட்டு வண்டிக்காரனோ, கடுங் கோபத்துடன் இந்த பிச்சைக்காரனைப், பார்த்து கடுமையான சொற்களினால் திட்டி ‘நீ உன் வேலையைப் பார்த்துட்டு போவியா, எனக்கு புத்தி சொல்ல வந்துட்டான்’ எனக் கூறி மாட்டை முன்பைவிட பலமாகத் தாக்கி ஓட்டிச் சென்றான்.

இந்த பிச்சைக்காரனால் அந்த காட்சியைக் காணமுடியாமல் அங்கிருந்து வேகமாக ஒடிச் சென்று விட்டான்.”

சுவாமியின் கண்களில் நீர் வழிந்தது.

இந்தக் கதையைக் கேட்ட நண்பர், தன் வாழ்வில் மனைவியை விடாது கொடுமைப்படுத்தி வாழும் கல் நெஞ்சக்காரர். அவர் சமீப காலமாக வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை அடைந்து கோவில்கள், சாமியார்கள், ஜோதிடர்கள் என சுற்றித் திரிந்து வருபவர்.

“சுவாமி அந்த கஷ்டப்பட்ட மாடு நான்தானே”, என்று மனச் சோர்வுடன், கேட்டார்.

“அது நீங்கள் இல்லை, உங்கள் மனைவிதான் அந்த மாடு படும்பாட்டை அனுபவித்து வருகிறார். அவரைச் சாந்தப்படுத்துங்கள். என் தந்தை உங்கள் தொழிலைச் சரிப்படுத்துவார்.”

சுவாமி அங்கிருந்த வாழைப்பழத்தை அந்த முகம் வெளிறிய நண்பரிடம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

யோகி ராமசுரத்குமரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா.

Source – https://www.facebook.com/parthasarathy.sannasi

Leave A Comment