சுவாமி யோகி ராம்சுரத்குமார் தான் தேர்ந்தெடுத்த அன்பர்களை தந்தையை நோக்கி அழைத்துச் செல்லும் பயணத்தின்போது, அன்பர்கள் பற்பல சுய பரிசோதனைகள் செய்யும் சந்தர்ப்பத்தை அருளுவார்.
சுவாமி யோகி ராம்சுரத்குமார் தான் தேர்ந்தெடுத்த அன்பர்களை தந்தையை நோக்கி அழைத்துச் செல்லும் பயணத்தின்போது, அன்பர்கள் பற்பல சுய பரிசோதனைகள் செய்யும் சந்தர்ப்பத்தை அருளுவார்.
அவர்களின் குணாதிசயங்கள், வாழும் வாழ்க்கை முறைகள் இவற்றிற்குத் தகுந்தாற்போல் தக்க சூழ்நிலைகளை உருவாக்கி அதன் வாயிலாக அன்பர்கள் தங்களின் ஆன்ம பயணத்தின் உண்மையான தன்னிலையை அறிந்து கொள்ள வைப்பார்.
பொதுவாக சுவாமி படிக்கச் சொன்ன சில ஞானிகளின் வாழ்க்கையையும், அவர்தம் உபதேசங்களையும், நண்பர்கள் ஆழ்ந்து படித்ததால் தாங்கள் அடைய வேண்டிய பரிபூரண ஞானத்தை அடைந்து விட்டார்கள் என்ற மாயை அவர்களிடம் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். சுவாமி அந்த மாயையை தன்னுடைய உன்னதமான லீலைகளால் தகர்த்தெறிந்து விடுவார்.
ஒரு முறை மிகப் பெரும் செல்வந்தரைக் கரைசேர்க்க சுவாமி தன் விநோதமான லீலையைச் செய்ய ஆரம்பித்தார்.
அந்த செல்வந்தர் சுவாமி அறிமுகம் செய்த ஞானியின் உபதேசங்களால் ஈர்க்கப்பட்டு தனை மறந்த நிலையில் இருந்தார். பகவானின் பரிபூரணத்தில் கரைந்துவிடத் தான் தயாராகிவிட்டதாக நம்பினார்.
ஒரு நாள் செல்வந்தர் தன் குடும்பத்தோடு சுவாமியைத்
தரிசிக்க வந்தார். அப்போது அவரைப் போன்றே மனநிலை கொண்ட மேலும் இருவர் தங்கள் குடும்ப சகிதம் வந்திருந்தார்கள்.
அனைவரும் சுவாமியைத் தரிசிக்க புன்னை மரத்தடிக்கு வந்தார்கள். சுவாமியை தரிசித்ததும் அவர்களின் ஆன்ம போதை அதிகரித்தது.
யாரோ பக்தர்கள் சுவாமிக்கு அணிவித்த மலர் மாலைகளை சுவாமி அம்மூவருக்கும் அணிவித்தார்.
நண்பர்களின் போதை இன்னும் அதிகமாகியது. சுவாமியே தங்களை அங்கீகரித்து விட்டார் என்று நம்பினார்கள். பிறவிக் கடலைக் கடந்து மறுகரை சேர்ந்துவிட்டதாக சுலபமாக நினைத்துக் கொண்டார்கள்.
அன்று மாலை சுவாமி புன்னை மரத்திலிருந்து தேரடி மண்டபத்திற்குப் புறப்பட்டார்.
செல்வந்தர் அணிந்திருந்த சட்டையை சுவாமி கழற்றச் சொன்னார். பின்னர் செல்வந்தரின் நண்பர்களில் ஒருவரிடம் துடப்பத்தையும், மயில்பீலியையும் கையில் கொடுத்து அவற்றைத் தூக்கிபிடித்தவாறு நடக்க வேண்டும் என உத்திரவிட்டார். மற்றொரு பணக்கார நண்பரின் கையில் இரண்டு சிறிய சாக்கு மூடைகளைக் கொடுத்து, ஒன்றைத் தோளிலும் மற்றொன்றை கையிலும் தூக்கி வரச்சொன்னார்.
சுவாமி செல்வந்தர் கரத்தை இறுகப் பிடித்துக் கொண்டார். அக் காட்சி புதிதாக திருமணமான மாப்பிள்ளை தன் அழகு மனைவியைக் கைப்பிடித்து அழைத்துச் செல்வது போல் இருந்தது.
மற்ற இருவரின் தோற்றமும் ஏவலாட்கள் திருமணமான தம்பதிகளைத் தொடர்ந்து செல்வது போல் இருந்தது.
இந்த நண்பர்களின் வீட்டுப் பெண்கள் இவர்களைத் தொடரந்து வரிசையாக வரவேண்டும்.
ஊர்வலம் புறப்பட்டது. சுவாமியின் உற்சாகம் கரைபுரண்டு பீறிட்டுச் சென்றது. செல்வந்தரின் கையைப் பிடித்தவாறு நடனமாடியபடியே சாலையில் சுவாமி நடக்க ஆரம்பித்தார்.
வழியில் ரயில் நிலையம் தாண்டி ஒரு சாலை சந்திப்பை ஊர்வலம் அடைந்தது.
அந்த சாலை சந்திப்பை அடுத்து ஒரு கிறிஸ்துவ தேவாலயம் இருந்தது.
தேவாலய விடுதியில் ஏராளமான கன்னிகா ஸ்திரீகள் இருந்தனர். தலைமை கன்னிகா ஸ்திரி தினமும் அந்த சாலை சந்திப்பில் சுவாமி வரும் சமயம் சுவாமிக்கு முகமன் சொல்ல வருவார்.
அவரோடு அன்று ஏராளமான இளம் கன்னிகா ஸ்திரீகளும் வந்திருந்தனர்.
சுவாமி அவர்களைப் பார்த்ததும் ஆனந்த மிகுதியில் நளினமாக நடனமாடியபடி அங்கேயே நின்றுவிட்டார்.
சுவாமி கைப்பிடித்து வைத்திருந்த செல்வந்தருக்கோ தாங்கமுடியவில்லை. வெட்கமும், கூச்சமும் ஒன்று சேர நெளிந்தார். குனிந்த தலை நிமிராமல் சுவாமியின் மணப்பெண் போலவே ஆகி விட்டதைக் கண்டு அவரது ஆண்மை அசிங்கமாக உணர்ந்தது.
மற்ற இரு நண்பர்களுக்கோ தலை தூக்கமுடியவில்லை. வெட்கம் பிடுங்கித் தின்றது. இளம் கன்னிகா ஸ்திரீகள் யாவரும் இவர்கள் எல்லோரையும் விசித்திரமாகப் பார்த்துக் கேலி செய்து உரக்கச் சிரித்தார்கள். நண்பர்கள் புழுவாக நெளிந்தார்கள்.
சுவாமியோ ஆனந்த நர்த்தனத்தை சாலையில் தொடர்ந்து ஆடினார். பெரிய கூட்டமே அங்கு சேர்ந்துவிட்டது.
நண்பர்கள் நாணிக் கோணி செய்வதறியாது திகைத்து நின்றனர்.
ஒரு வழியாக இந்த லீலையை முடித்துக்கொண்டு சுவாமி அனைவரையும் அழைத்துக்கொண்டு தேரடி மண்டபம் வந்து சேர்ந்தார்.
நண்பர்களை சிவகாசி நாடார் சத்திரம் சென்று ஓய்வெடுத்து விட்டு மறுநாள் வரச்சொன்னார்.
சத்திரம் சென்று நண்பர்கள் தங்களின் இயல்பான நிலைக்கு வருவதற்கு வெகு நேரம் ஆகிவிட்டது.
தங்களின் தேகாபிமானமும், ஆணவமும் எந்த அளவிற்கு தங்களுக்குள் ஊறிக் கிடக்கிறது என்பதை அறிந்த நண்பர்கள் வெட்கமடைந்தார்கள்.
ஆன்மீகப் பயணம் அவ்வளவு எளிதானதல்ல என்று உணர்ந்தார்கள்.
அவர்களின் சாதனா தொடர்ந்தது. சுவாமி அவர்களை ஆன்மப் பாதையில் மென்மேலும் வைராக்கியத்தோடு செல்ல ஊக்குவித்தார்.
யோகி ராம்சுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா
Source – https://www.facebook.com/parthasarathy.sannasi