சுவாமி யோகி ராம்சுரத்குமாரின் வாழ்வில் பல்தரப்பட்ட நண்பர்கள் வந்து சென்றார்கள்.
சுவாமி யோகி ராம்சுரத்குமாரின் வாழ்வில் பல்தரப்பட்ட நண்பர்கள் வந்து சென்றார்கள்.
பால்ய கால நண்பர்கள், இளமையில் இருந்த நண்பர்கள், சுவாமியின் குருவினால் சேர்ந்த நட்புக்கள் முடிவாக தன்னைத் தொடரும் அவரின் அரும்பெரும் நண்பர்கள் என சுவாமியின் வாழ்வில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இருந்தார்கள்.
பால்ய கால நண்பர்கள் அனைவரும் அவரது பிறந்த கிராமமான நர்தராவையும் அதைச் சுற்றியுள்ள மற்ற கிராமங்களை சேர்ந்தவர்களாவார்கள்.
அந்த நண்பர்களின் பால்யப் பருவம் பல்வகை விளையாட்டிலும், முக்கியமாக மல்யுத்தத்திலும், கங்கையில் போட்டி போட்டுக் கொண்டு நீந்துவதிலும் குதூகலமாகக் கடந்தது.
அந்தக் காலக்கட்டத்தில் கங்கை மாதாவை வணங்குதல், படித்தல், விளையாடுதல் இதுபோக சுவாமிக்கு மட்டும் சாதுக்களைப் போசித்தல் போன்ற பழக்கங்கள் அந்தக் குழந்தைகளின் வாழ்வை நிறைத்திருந்தன.
இவை தவிர குழந்தைகள் யாவரும் தங்களின் பெற்றோரிடம் இரவில் ராம, கிருஷ்ண, ஹனுமான் கதைகளை கேட்டவாறே தூங்குவது போன்ற அற்புதமான பழக்கத்தையும் கொண்டிருந்தார்கள்.
இந்த பழக்க வழக்கத்தினால் அந்த கிராமத்துக் குழந்தைகள் உத்தமர்களாகவே வளர்ந்தனர். அன்போடு வளர்ந்தனர். ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவிகளை மனப்பூர்வமாகச் செய்துகொண்டு வாழ்ந்திருந்தனர்.
பின்னர் வாழ்க்கை எனும் நதியின் ஓட்டத்தில் பால பருவ நண்பர்கள் பல்வேறு திசைகளில் பயணித்ததால் பால பருவ நட்புக்கள் நிலைத்து நிற்க முடியாமல் போனது.
பாலப் பருவம் கடந்து இளமையில் கல்லூரி நண்பர்கள் வந்தனர். ஆனால் அவர்கள் நட்பு பால்ய பருவ நட்பு போல் உறுதியானதாக இல்லை.
கல்லூரிப் படிப்பு முடிந்து சுவாமி ஆசிரியர் வேலை பார்க்கும்போது ஏற்பட்ட நட்புக்கள் அறிவுஜீவிகளாக இருந்தார்கள்.
நான் அறிந்த வரையில் சுவாமிக்கு, திரு.ராம்தத் சௌத்திரி என்ற பெரும் பண்ணையார், ராம்ஜீவன் ராய் என்ற மற்றொரு ஆசிரியர், சந்திரிகா தாக்கூர் என்ற வழக்கறிஞர் , இவர்கள் சுவாமியின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தனர்.
அக்காலத்தில் நண்பர்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கங்கை நதியின் கரையிலோ கங்கையின் உப நதியான பாலன் நதிக்கரையில் உள்ள சிவன் கோவிலிலோ அமர்ந்து பசி, தாகம் மறந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.
அவர்கள் பேசும் பொருள் இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்தைப் பற்றியும் அதற்காகப் போராடும் தலைவர்களின் கொள்கைகள் பற்றியும் மற்றும் ஞானிகளின் ஆன்மீகச் சிந்தனைகளைப் பற்றியும் மட்டுமே எப்போதும் இருக்கும்.
அவர்களின் அரசியல் விவாதம், அரவிந்தர், நேதாஜி சுபாஸ்சந்திர போஸ், மஹாத்மா காந்தி, மற்றும் நேரு, பட்டேல் போன்ற மகோன்னத தலைவர்களின் சிந்தைனைகளைச் சார்ந்தே இருக்கும்.
சுவாமி, மஹாத்மா காந்தி மற்றும் அரவிந்தர் ஆகியோர் சொல்லியபடி ஆன்மீக வழியில் சென்று, அஹிம்சை வழியில் சுதந்திரத்தைப் பெற வேண்டும் எனக் கூறுவார்.
ஏனைய நண்பர்கள் சுபாஸ் சந்திரபோஸின் மறவழியைக் கையாண்டு சுதந்திரம் அடைய வேண்டும் என்று வன்மையாகக் கூறுவார்கள்.
இவர்களின் இந்த மாறுபட்ட கருத்தினால் இவர்களது நட்பும் நீண்டநாள் நிலைத்திருக்கவில்லை.
பின்னர், சுவாமி குருவை அடைந்து கடும் சாதனாவை மேற்கொண்ட காலத்தில், பல குருபாய்களோடு நட்பு ஏற்பட்டது. சுவாமியின் கடும் சாதனா முறையில் அநேகமாக அனைத்து குரு நண்பர்களும் சுவாமியை வெறுத்து ஒதுங்கி போய்விட்டார்கள்.
அங்கே சுவாமியின் குரு சுவாமி ராமதாசர் மட்டுமே சுவாமியுடன் எஞ்சி நின்றார்.
காலப்போக்கில் சுவாமி ராமதாசரிடம் நமது சுவாமி கரைந்து தெய்வமாகி நின்றார். திருவண்ணாமலை அடைந்தார்.
1959ல் சுவாமி திருவண்ணாமலை அடைந்து முடிவில் 1965ல் இருந்து அங்கேயே வாழ ஆரம்பித்த பின்தான் சுவாமிக்கு, நிரந்திரமான நண்பர்கள் தோன்றினார்கள்.
சுவாமியின் ஒவ்வொறு சொல்லும், செயலும் அந்த உண்மையான, நிரந்தரமான நண்பர்களுக்குத் தெய்வீகமாகத் தெரிந்தது. சுவாமியை அவர்கள் வணங்கினார்கள், சேவித்தார்கள். தொழுது மகிழ்ந்தார்கள்.
சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் எந்த பேதமுமின்றி ஒன்றாக அமர்ந்து சுவாமியின் நாமத்தைப் பாடி உய்வடைந்தார்கள்.
முடிவில் சுவாமிக்கு உண்மையான, நிரந்திரமான, என்றென்றும் சுவாமியின்பால் பக்தியில் நிலைத்து நிறைந்திருக்கும் பல தேசத்து நண்பர்கள் வந்தார்கள்.
நீங்கள் அறிவீர்களா, சுவாமியின் நிரந்திர நண்பர்களில், நீங்களும் நானும் இருந்தோம், இருக்கிறோம், இருப்போம் என்று!?
நமது வாழ்விலும், நண்பனாய், சேவகனாய், நல்லாசிரியனுமாய், முடிவில் தெய்வமாய் நம்மோடு ஜென்ம ஜென்மமாய் இருக்கும் ஒரே நண்பன் சுவாமியன்றோ!
ஏனைய நண்பர்கள் வருவார்கள், கூடச் சற்றே வருவார்கள், பின் மறைந்து விடுவார்கள்.சுவாமி ஒருவரே என்றென்றும் உடனிருந்து உய்விப்பவர்.
யோகி ராம்சுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா.
Source – https://www.facebook.com/parthasarathy.sannasi