நாங்கள் நண்பர்கள் மூவரும், எங்கள் குடும்பத்தினரும் சுவாமி யோகி ராம்சுரத்குமாரின் சந்நிதித் தெரு வீட்டில் சுவாமியுடன் சுமார் 10 நாட்கள் இருந்த சமயம் அது.
நாங்கள் நண்பர்கள் மூவரும், எங்கள் குடும்பத்தினரும் சுவாமி யோகி ராம்சுரத்குமாரின் சந்நிதித் தெரு வீட்டில் சுவாமியுடன் சுமார் 10 நாட்கள் இருந்த சமயம் அது.
தினமும் தெய்வீகப் பேரானந்தத்துடன் பொழுது கழிந்து கொண்டிருந்தது.
பாடல்கள், ஞானச்செறிவுடன் கூடிய உரையாடல்கள், ஞானிகளின் வரலாறுகள், அவர்களின் போதனைகள் மற்றும் வானியல், உலகியல், அரசியல், முடிவில் முக்கியமாக முழுமையான மௌனம் என வாழ்வின் உண்மையான சொர்க்கத்தை அவ்வமயம் அனுபவித்துக் கொண்டிருந்தோம்.
அன்று அன்னதானத்தை பற்றிய விஷயங்களை சுவாமி கூறிக்கொண்டிருந்தார்.
வடஇந்தியாவில் சாதுக்களுக்கும், பக்தர்களுக்கும் அளிக்கப்படும் அன்னதானத்தைப் பற்றி சுவாமி விவரித்தார்.
புனித ஸ்தலங்களிலும், ஆசிரமங்களிலும் பரிமாறப்படும் பொதுவான உணவைப் பற்றி சுவாமி கூறினார்.
சமைப்பதற்கு எளிதானதாகவும், ஆரோக்கியமானதாகவும், தெய்வ சிந்தனைகளுக்கு ஊறு விளைவிக்காததாகவும் உள்ள எளிய உணவான சுரைக்காய் சோறுதான் பெரும்பாலும் சமைக்கப்பட்டு சாதுக்களுக்கும், பக்தர்களுக்கும் பரிமாறப்படும் என்று சுவாமி கூறினார்.
இதைக் கேட்ட நண்பர்களுக்கு சந்நிதித் தெரு வீட்டிலேயே சுரைக்காய் சோறு சமைத்துச் சாப்பிட ஆசை ஏற்பட்டது. தங்களது ஆசையை சுவாமியிடம் கூறினர்.
சுவாமி ஆனந்தமாகச் சிரித்தபடி சம்மதித்தார்.
“ஆனால் ஒன்று நண்பா. ஆண்கள்தான் சமையல் செய்ய வேண்டும். பெண்களை உதவிக்கு அழைக்கக் கூடாது.”
சுவாமியின் இந்த க்ஷரத்தை ஆண்கள் வீராவேசத்தோடு ஒப்புக் கொண்டனர்.
ஆண்கள் திட்டமிட ஆரம்பித்தனர். என்ன பாத்திரங்கள் வாங்க வேண்டும், என்னென்ன அளவில் அரிசி மற்றும் பலசரக்கு, சுரைக்காய் வாங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அவர்களால் முடியவில்லை.
“சுவாமி என்ன பாத்திரங்கள் மற்றும் என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்பதில் மட்டும் பெண்களை எங்களுக்கு உதவி செய்யச் சொல்லுங்கள் சுவாமி.”
ஆண்கள் பரிதாபமாக சுவாமியிடம் விண்ணப்பித்தனர்.
சுவாமி சிரித்தபடி சம்மதித்தார்.
ஒரு பெரிய நூல் ஆலை அதிபர், ஒரு அச்சக உரிமையாளர், ஒரு வியாபாரி என மூவரும் பரிதாபமாக பெண்களிடம், உதவிக்காகக் கெஞ்சினார்கள்.
சுவாமி சொன்னதினால் பெண்களும் மிகவும் பெருந்தன்மையோடு உதவினர். ஆண்கள் கவனமாகப் பெண்கள் கூறியதைக் குறித்துக் கொண்டனர்.
சுவாமியிடம் உத்திரவு பெற்று வாழ்வின் முதன்முறையாகக் கடை வீதிக்குச் சென்றனர்.
பெண்கள் சொன்ன பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு சந்நிதித் தெரு வீட்டை அடைந்தனர்.
வீட்டின் பின்புறம் கிணறுக்குப் பக்கத்தில் சமையல்கூடத்தை அமைத்தனர். அங்கிருந்த பெரிய துணி துவைக்கும் கல் மீது சுவாமி அமர்ந்து கொண்டார். பெண்களும் குழந்தைகளும் எதிரே இருந்த மேடையில் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்த்தனர்.
ஆண்கள் கர்மமே கண்ணாக இருந்தனர்.
ஒருவர் அரிசியை நீர்விட்டு கல் நீங்க அலசினார். மற்றொருவர் சுரைக்காயைத் தோல் சீவி சிறு துண்டங்களாக்கினார். மற்றொருவர் ஸ்டவிற்கு எண்ணையிட்டு, திரியிட்டு தயாராக்கினார்.
சுவாமியின் கண்காணிப்பிலும், அறிவுறுத்தலிலும் சமையல் வேலை சுறுசுறுப்பாக நடந்தது. அரிசியும் காயும் நன்கு வெந்து கலந்து சில வாசனைப் பொருட்கள், உப்பு, முடிவில் நெய் சேர்த்து வெற்றிகரமாக சமையலை முடித்தோம்.
சுரைக்காய் சாதத்திற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் துவையலும் செய்தோம்.
எல்லோரையும் அமரச் சொன்னோம். வாங்கி வந்திருந்த வாழை இலையில் சுவாமிக்கு முதலில் படைத்தோம். பின் அனைவருக்கும் பரிமாறினோம்.
சுவாமி ஆனந்தமாக ஒரு கவளம் எடுத்து அருந்தினார்.
ஆவலோடு சுவாமியின் முகவதனத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம்.
“அப்பாவின் பிரசாதம்.”
என சுவாமி ஆனந்தமாகக் கூறினார்.
அனைவரும் சாப்பிட்டார்கள். நாங்களும் சாப்பிட்டோம்.
இதுயென்ன தேவாமிர்தமா, வியந்து விக்கித்து நின்றோம். அப்படி ஒரு தெய்வீக ருசி.
அந்த ருசி நாங்கள் பயன்படுத்திய பதார்த்தங்களினாலோ அன்றி எங்களது சாமர்த்தியமான சமையல் திறமையினாலோ வந்தது அல்ல, சுவாமியின் பேரரருளினால் ஏற்பட்ட ருசி என்பதை புரிந்து கொண்டோம்.
அண்டசடாட்சரங்களையும் படைத்து, காத்து, சம்ஹாரம் செய்யும் தெய்வமாகிய எங்கள் குருநாதன், எளியோரான, எங்களை உணவு செய்ய வைத்து, அதைப் பரம்பொருளான சுவாமிக்கே படைக்கும் பெரும் பாக்கியத்தை அருளிய அந்த பெருங் கருணையை என்னவென்று சொல்வது.
அவர் பாதம் பணிந்து, கண்களில் நீர் பெருக அவரை நமஸ்கரிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்.
யோகி ராம்சுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா.
Source – https://www.facebook.com/parthasarathy.sannasi