Miracles admin  

அவர் அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர். நடுத்தர வயதைக் கடந்த அவர் இருதய நோயால் மிகவும் சிரமப்பட்டார்

அவர் அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர். நடுத்தர வயதைக் கடந்த அவர் இருதய நோயால் மிகவும் சிரமப்பட்டார்.

அவருக்கு ஒரு இளம் மகளும் மனைவியும் இருந்தனர். அவரின் உயர் அதிகாரி வாயிலாகச் சுவாமி யோகி ராம்சுரத்குமாரை அவர் அறிந்திருந்தார்.

உயர் அதிகாரி சுவாமியைத் தரிசிக்க வரும் சமயமெல்லாம் அவர் உடன் வருவார். சுவாமி அந்த அதிகாரிக்கு என்றும், எங்கும், எதிலும் இருக்கும் பரப்பிரம்மத்தையும் பிரம்ம சுகத்தையும், அவ்வப்போது காட்டி வந்தார்.

இருதய நோயாளியான அதிகாரி சுவாமியின் பிரம்ம சொரூபத்தின் சாட்சாத்காரத்தையும் அவ்வப்போது தரிசித்தார்.

நோயின் உக்கிரத்தால் தன் அந்திம காலம் நெருங்குவதை அந்த அதிகாரி உணர்ந்தார்.

தன் மனைவிக்கும், மகளுக்கும் சுவாமியை அறிமுகம் செய்து வைத்தார். சிறந்த பரத நாட்டியக் கலைஞரான தாயும், மகளும் சுவாமியின் அருளால் ஆட்கொள்ளப்பட்டனர்.

அதிகாரி தன் வாழ் நாளுக்கு பின் தன் குடும்பம் வாழ்வில் அமைதி இழந்து துக்கத்தில் வீழும் போதெல்லாம் சுவாமியின் ஆத்ம நிழலில் தங்கி ஆனந்தம் பெறுவதற்கு திருவண்ணாமலையில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கினார்.

அந்த சிறிய அழகான வீட்டில் அவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் திருவண்ணாமலை வந்து, தங்கியிருந்து சுவாமியை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

அவர்கள் எண்ணம், பேச்சு அனைத்திலும் சுவாமியே நிறைந்திருந்தார்.

அடுத்த சில நாட்களில் அதிகாரி மரணமடைந்தார். அவர் தன் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்திய சுவாமி, அவர்களது வாழ்வின் ஆதாரமாகவும், வழிகாட்டியாகவும் மாறினார்.

தாயும், மகளும் அடிக்கடி திருவண்ணாமலை வந்தனர். சுவாமியின் அமுத மொழியையும், ஆழ்ந்த தெய்வீகப் பேரமைதியையும் அனுபவித்தனர்.

அந்நாள் வரை சுவாமியை பிரம்ம ஞானி என்றே அடையாளம் கண்ட அவர்கள், சுவாமி அதிசயங்களும், தேவைப்படும் சமயம் செய்யக்கூடியவர் என உணர்ந்திருக்கவில்லை.

ஒரு முறை அவர்கள் ஒரு மாத காலம் சுவாமியின் தரிசனத்தில் திளைக்க விரும்பி திருவண்ணாமலை வந்தனர்.

வந்த ஓரிரண்டு நாட்களிலேயே மகள் கடுமையான பல் வலியால் அவதிப்பட்டார். எனவே தாயார் சுவாமியிடம் தாங்கள் பல் வைத்தியத்திற்காகத் தங்கள் நகரத்திற்குச் செல்லப் போவதாகத் தெரிவித்தார்.

சுவாமி அமைதியாக சிகரெட் பிடித்தவாறு அமர்ந்திருந்தார். மகள் பல் வலியில் மிகவும் அவஸ்தை அடைந்து கொண்டிருந்தார்.

சுவாமி அவரை சைகை மூலம் அருகழைத்தார். தன் ஜிப்பா பையிலிருந்து காய்ந்த ஒரு நெல்லிக்காயை எடுத்து அவரிடம் கொடுத்து வாயில் போட்டுக் கொள்ளச் சொன்னார். அப்பெண்மணியும் நெல்லிக்காயை வாயில் அடக்கிக் கொண்டார்.

சில நிமிடங்கள் கழிந்தன.

“அம்மா, எனக்கு வலியே இல்லை. நான் இப்போது நன்றாக இருக்கிறேன்.”

மகள், மிகுந்த ஆச்சரியத்துடனும், மகிழ்வோடும் கூறினார்.

சொத்தையான பல்லின் வலி எப்படிக் குறைந்தது? தாயின் மனதில் சந்தேகம் பிறந்தது.

சுவாமி அவரிடம் மகளை அழைத்துக்கொண்டு வீட்டின் பின்பக்கம் சென்று சூரிய வெளிச்சத்தில் மகளின் சொத்தைக் பல்லைப் பரிசோதிக்கச் சொன்னார்.

தாய் மகளைப் பின்பக்கம் அழைத்துச்சென்று, சூரிய வெளிச்சத்தில் மகளின் பல்லை ஆராய்ந்தார். அங்கே சொத்தைப் பல் இருந்த தடமே இல்லை.

“சுவாமி சொத்தைப் பல்லைக் காணோம் சுவாமி.”

மிகுந்த ஆச்சரியத்தோடு தாய் கூறினார்.

“என் தந்தையோடு சில காலம் இருக்க வந்த உங்களை தந்தை எப்படி அம்மா வலியோடு திருப்பி அனுப்புவார். என் தந்தை சிறிது காலம் கழித்தே உங்களை அனுப்புவார் அம்மா. தந்தையின் லீலா வினோதங்களை யார் அறிவார் அம்மா?!”

சுவாமி குறும்புச் சிரிப்புடன் ஜொலித்துக் கொண்டிருந்தார்.

தாயும், மகளும் தங்கள் பயணத் திட்டப்படி ஒரு மாத காலம் சுவாமியின் சந்நிதியில் வாழ்வின் வலி மறந்து தெய்வத்தோடு நிறைவாக இருந்தனர்.

யோகி ராமசுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா.

Source – https://www.facebook.com/parthasarathy.sannasi

Leave A Comment