ஒரு உண்மையான குருவை இவ்வுலகில் காண்பது மிகக் கடினம். அதனிலும் கடினம் அவரின் அருகாமை கிட்டுவது
திருவண்ணாமலை நகருக்கு வெளியே அமைந்துள்ள ரயில் நிலையத்தின் பின்புறத்தில், ஒரு விவசாய நிலத்தின் மத்தியில் இருந்த ஒரு பிரமாண்ட புன்னை மரத்தின் நிழலில் நமது சுவாமி யோகி ராம்சுரத்குமார் அமர்ந்திருந்தார்.
அவரின் எதிரில் சில பக்தர்கள் அமர்ந்திருந்தனர். சுவாமி மந்தகாச, புன்னகையுடன் பக்தர்களை பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தார். மௌனத்தில் நேரம் கரைந்து கொண்டு இருந்தது.
சுவாமி மெதுவாக நளினமாக ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்தார். ஆழமாக ஒருமுறை உறிஞ்சிய பின் சிகரெட்டை சாம்பல் தட்டும் கிண்ணத்தில் வைத்தார்.
பக்தர்களை மறுபடியும் கனிவோடு நோக்கினார். தனது மதுரமான குரலில் ஒரு சமஸ்கிருத சுலோகத்தைப் பாடினார். பக்தர்கள் மெய்மறந்து கேட்டனர்.
சுலோகம் முடிந்தது. பக்தர்கள் சுவாமியையே, பார்த்துக்கொண்டிருந்தனர்.
சுவாமி தன் காந்த குரலில் அச்சுலோகத்தின் அர்த்தத்தை ஆங்கிலத்தில் பகர்ந்தார்.
“ஒரு உண்மையான குருவை இவ்வுலகில் காண்பது மிகக் கடினம். அதனிலும் கடினம் அவரின் அருகாமை கிட்டுவது. அதனிலும் மிகக் கடினம் அவரின் அருளைப் பெறுவது. குருவின் அருளைப் பெற்றோர் மிகுந்த பாக்கியசாலிகள். அவர்கள் குருவில், இரண்டற கலந்து விடுகின்றனர்.”
சுவாமி மௌனமாக மறுபடியும் சிகரெட்டை எடுத்து பிடித்தார்.
அங்கே இருந்த பக்தர்களை மோனமாகப் பார்த்து சிரித்தார். சட்டென்று அங்கே முழு முதற் பொருள் அடியவர்களை பூரணமாக அரவணைத்துக் கொண்டது.
அங்கே குரு இருந்தார். குருவின் அருளில் கரைந்த திருவடியார்கள் கூட்டம் இருந்தது.
அந்த புன்னை மரம், தெய்வமாய் அமர்ந்திருந்த குரு, அவரில் நீக்கமற கலந்திருந்த திருவடியார்கள்: அங்கே அன்பும், பர ஞானமும் சாந்தியும் பேரழகும் ஆனந்த பரவசத்தில் நர்த்தனமாடிக் கொண்டிருந்தன. ஞான மது உண்ட மயக்கத்தில் பக்தர்கள் தனை மறந்து அமர்ந்து இருந்தனர்.
யோகி ராமசுரத்குமரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா.