சுவாமி யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு இயல்பாகவே மிகவும் அதிகம்.
சுவாமி யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு இயல்பாகவே மிகவும் அதிகம். தமிழில் மழலையாகப் பேசினாலும் தமிழ் வார்த்தைகளில் சொல் விளையாட்டுகள் அதிகம் செய்வார். அவரின் வார்த்தை ஜாலங்கள் நமக்கு ஒருவித சிலிர்ப்பான மகிழ்ச்சியை அளிக்கும்.
அன்று ஒரு அன்பர் தன் குடும்பத்தோடு வந்திருந்தார். அந்த நண்பர் கல்லூரியில் முதுகலைப் பட்டம் வாங்கியவர். சொற்களில் விளையாடுபவர். ஞானிகளையும், அவர்தம் உபதேசங்களையும் கற்றுத் தேர்ந்தவர். தர்க்கத்தில் அவர்முன் யாரும் நிற்க முடியாது.
ஆயினும் அவருக்கு சுவாமியே பிரம்மம், தெய்வம் சகலமும். அன்று அவர் கையில் இரண்டு சீப் வாழைப்பழங்களைக் கொண்டுவந்து சுவாமியின் திருவடியில் சமர்ப்பித்தார்.
“சுவாமி இப்பழங்கள் வீட்டில் விளைந்தது. தாங்கள் ஏற்றருள வேண்டும்.”
அன்பர் பணிவுடன் கூறினார்.
சுவாமி பழங்களைத் தன் கரத்தில் எடுத்து வைத்துக்கொண்டு அதையே கருணையோடு பார்த்தவண்ணம் இருந்தார். சில நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தது.
“இப்பழங்கள் எங்கு விளைந்தது நண்பா?”
சுவாமி எதார்த்தமாக வினவினார்.
“வீட்டில்தான் காய்த்தது சுவாமி.”
நண்பர் அப்பாவியாகப் பதிலளித்தார்.
சுவாமி மீண்டும் வினவினார். பக்தர் ஒருவித சங்கடத்தோடு அதே பதிலைக் கூறினார்.
“வீட்டில் எங்கே நண்பா? கூடத்திலா, படுக்கையறையிலா அல்லது அடுப்படியிலா?”
சுவாமி சிரிக்காது கேட்டவுடன் அந்த முதுகலைப் பட்டதாரி பதற்றத்துடன் அசடு வழியக் கூறினார்;
“சுவாமி எங்கள் வீட்டின் கொல்லைப்புறத் தோட்டத்தில் வளர்ந்த வாழை மரத்தில் விளைந்த பழமிது சுவாமி.”
அன்பரின் முகம் வெட்கத்தில் சிவந்தது. சுவாமியின் திருமுகத்தில் மந்தகாசச் சிரிப்பு அட்டகாசமாக மலர்ந்தது.
1993, செப்டம்பர் 15ந் தேதி யோகி ராம்சுரத்குமார் ஆசிரம நிலத்தைக் கிரையப் பதிவு செய்த நாள். அன்று பக்தர்கள் பெருமளவில் சுவாமியைச் சுற்றி அமர்ந்திருந்தனர்.
அப்போது ஒரு பக்தர் சுவாமியிடம் சரித்திர நாவல்கள் எழுதும் புகழ் பெற்ற எழுத்தாளர் சுவாமியைத் தரிசிப்பதற்காக வந்திருப்பதாகக் கூறினார். சுவாமி அவரை அழைத்து வரச் சொன்னார்.
எழுத்தாளர் வந்தார். சுவாமியை நமஸ்கரித்தார். பின் உரிமையோடு டாம்பீகமாகப் பேசலானார்.
“சுவாமி நான் இதுவரை கபடச் சாதுக்களையும், போலி ஞானிகளையுமே அதிகமாகப் பார்த்து ஏமாந்து போனவன். இன்றுதான் நான் உண்மையான ஞானியைத் தரிசிக்கின்றேன் சுவாமி.”
இதைக் கேட்ட சுவாமி அட்டகாசமாக ஓங்காரமாக தன் சரீரமே குலுங்கக் குலுங்கச் சிரித்தார்.
“நண்பா, மறுபடியும் நீ ஏமாந்து போனாயே. நீ இப்போது பார்த்துக் கொண்டிருப்பதும் ஒரு கபட சூத்திரதாரிதான். இந்த போலி ஞானியைப் பார்ப்பதற்காக உன்னுடைய மதிப்புமிகுந்த நல்ல நேரத்தை வீணடித்து விட்டாயே”.
இவ்விதம் கூறி சுவாமி மீண்டும் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்.
எழுத்தாளர் வேர்த்து விறுவிறுத்துப் போனார்.
பிரபலப் பாடகி திருமதி. வாணி ஜெயராம் சுவாமியைத்
தரிசிக்க வந்தார். சுவாமி அவருக்கு ஆசிமழை பொழிந்து கொண்டிருந்தார்.
திருமதி வாணி ஜெயராம் அவர்கள் சுவாமியின் விருப்பத்திற்கிணங்க பற்பல பாடல்களை மெய்யுருகிப் பாடினார். சுவாமியும், பக்தர்களும் அந்த கானமழையில் இன்புற்றிருந்தனர்.
திருமதி வாணி ஜெயராம் புறப்படும் நேரம் வந்தது. அவர் சுவாமியை நமஸ்கரித்து விடை பெற்றார்.
சுவாமி தன் முழு அருள் நோக்கையும் திருமதி வாணி ஜெயராம் மீது பொழிந்து கொண்டிருந்தார். திருமதி வாணி ஜெயராம் கண் கலங்க அங்கிருந்து புறப்பட்டார்.
சுவாமி திருமதி. வாணி ஜெயராமுக்கு பிரசாதம் கொடுக்கவில்லையே என்று ஞாபகம் வந்தது.
“வாணி”
சுவாமி அழைத்தார்.
திருமதி வாணி சுவாமியைத் திரும்பிப் பார்த்தார்.
“வாணி, வா நீ.”
சுவாமியின் சிலேடைத் தமிழ் அங்குள்ள அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.
திருமதி வாணி மகிழ்வோடு சிரித்தபடி சுவாமியிடம் திரும்பி வந்து பிரசாதம் பெற்று, மீண்டும் சுவாமியை நமஸ்கரித்துச் சென்றார்.
Source – https://www.facebook.com/parthasarathy.sannasi