சுவாமி யோகி ராம்சுரத்குமாரிடம் பற்பல விதமான பக்தர்கள் வந்தார்கள். இவர்களிடம் சுவாமி உரையாடும் அழகையும், பாங்கையும் வர்ணிப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல.
சுவாமி யோகி ராம்சுரத்குமாரிடம் பற்பல விதமான பக்தர்கள் வந்தார்கள். அவர்களில், சந்நியாசிகள், இல்லறவாசிகள், பிரம்மச்சாரிகள், ஆத்ம சாதகர்கள், ஞானிகள், மடாதிபதிகள், விஞ்ஞானிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், உயரதிகாரிகள், மேலும் பற்பல விற்பன்னர்கள், பாமர மக்கள், அரசியல்வாதிகள் என அனைத்துத் தரப்பினரும் அடங்குவர்.
இவர்களிடம் சுவாமி உரையாடும் அழகையும், பாங்கையும் வர்ணிப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல.
1970களின் பிற்பகுதியில் சுவாமியை அடிக்கடி தரிசித்த பெருந்செல்வந்தரான ஒரு பக்தருக்கு சுவாமியுடனேய சதா சர்வகாலமும் இருக்க வேண்டும் என்ற அடங்கா ஆசை ஏற்பட்டது.
குடும்பத்துடனையே எப்பொழுதும் சுவாமியிடத்தில் வரும் அவர், குழந்தைகளின் படிப்பிற்காக சீக்கிரம் ஊர் திரும்பும் கட்டாயத்தினால் சுவாமியை விட்டு சீக்கிரம் பிரிய நேர்ந்தது. எனவே மறுமுறை அவர் தனித்து சுவாமியிடம் வந்தார்.
அதிக நாள் சுவாமியுடன் இருந்து ஆத்ம சாட்சாத்காரம் அடைய விரும்பிய அவரை, சுவாமி அவர் தனியாக வந்ததிற்க்காகக் கடுமையான சொற்களினால் கண்டித்தார். மறுபடியும் வருவதென்றால் குடும்பத்தோடுதான் வர வேண்டும் என கண்டித்துக் கூறினார். பக்தர் சோர்ந்து போனார்.
சற்று நேரத்திலேயே சுவாமி அவரை அனுப்பி விட்டார்.
ஊர் திரும்பிய பக்தர் சில நாட்கள் கழித்து சுவாமியிடம் கிடைக்கும் அந்த ஆனந்த அமிர்தத்தைப் பருகிப் பரவசமடைய உடுத்திய துணியோடு, திருவண்ணாமலை செல்வதற்காகும் பேருந்து கட்டணத்திற்கு மட்டும் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் திருவண்ணாமலைக்குப் பயணப்பட்டார்.
சுவாமியின் சந்நிதி வீட்டின் முன் நின்றார். சற்றே தயங்கினார். திடீரென சுவாமி உள்ளிருந்து வெளியில் வந்தார்.
இரும்புக் கதவிற்கு வெளியே நிற்கும் பக்தரைப் பார்த்தார். மெதுவாகக் கதவைத் திறந்தார்.
பக்தரைக் கைப்பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். பக்தரை அமரச் சொன்னார். சுவாமி தன் இருக்கையில் அமர்ந்தார். அங்கே வேறு எவரும் இல்லை.
சுவாமி சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார். அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது.
சுவாமியின் சிரிப்போ பேச்சோ எதுவுமேயில்லை. நேரம் சென்று கொண்டே இருந்தது. பிரம்மத்தின் பேரமைதியை அந்த பக்தர் இதுவரை அறியாதவர். அதில் அனைத்தும் கரைந்து போய்விடும் என்பதும், அது அகண்ட பிரமாண்ட, எல்லையில்லா பெருவெளி என்பதும், அங்கு எதுவுமே உணரப்படுவதில்லை, உணர்பவரும் இருப்பது இல்லை, உணர்ச்சிகளுக்கும் அங்கு இடமில்லை என்பதை அந்த பக்தர் அறிந்திருக்கவில்லை.
அங்கு அதைத் தவிர்த்து அவரோ வேறு எவரோ, எதுவுமோ இருக்க இயலாது என்பதையும் அந்த பக்தர் அறிந்திருக்கவில்லை.
பக்தருக்கு இந்த ஆழ்ந்த அமைதி முற்றிலும் புதியது. ஒருவித இனந் தெரியாத பயம் அவரைத் தொற்றிக் கொண்டது. வெகு நேரம் கடந்தது.
அங்கே ஒரு செயலும் நடக்கவில்லை.
திடீரென சுவாமி பக்தரிடம், “ஏதேனும் சொல்ல வேண்டுமா?” எனக் கேட்டார். “நான் இங்கேயே இருப்பதற்காக வந்துள்ளேன் சுவாமி”, பக்தர் பதிலுரைத்தார்.
“இங்கே இந்த பிச்சைக்காரர் போல் நிறைய சோம்பேறிகள் இருக்கிறார்கள். உங்களுக்கு ஊரில் வேலை இருக்கும்,” எனச் சுவாமி கூறினார்.
பின்னர் சுவாமி பாயின் கீழ் இருந்த பணத்தை எடுத்து அவர் கையில் கொடுத்தார்.
“போயிட்டு வாங்க ராஜா”, என்று சொல்லி பக்தரை அனுப்பி வைத்தார். பக்தரும் ஒருவித நிம்மதிப் பெருமூச்சு விட்டு ஊர் வந்து சேர்ந்தார்.
சுவாமியுடன் தனித்திருப்பது தவமாகும். தவம் செய்ய பக்தியும், தனித்திருக்கும் வலிமையும், வைராக்கியமும் வேண்டும். வெறும் ஆசையிருந்தால் மட்டும் போதாது.
யோகி ராமசுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா.
Source – https://www.facebook.com/parthasarathy.sannasi