Miracles admin  

தனம் தந்து, பற்றறுத்து சுவாமி அவருக்கு அனுக்கிரஹம் செய்தார்.

சுவாமி யோகி ராம்சுரத்குமாரின், தெய்வீகப் பணிகளை எவராலும் புரிந்து கொள்ள இயலாது.

சுவாமி தனது பணிகளைச் செய்து முடித்தபின், சுவாமியின் ஸ்மரணம், நமது மனதிலே பரிபூரணமாக இருந்தால் மட்டுமே அப்பணியின், தாத்பரியத்தை, நம்மால் ஒருவேளை அறிந்து புரிந்து கொள்ள சாத்தியமாகலாம்.

அத்தகைய சுவாமியின் தெய்வீகப் பணி ஒன்றை இன்று பார்க்கலாம்.

பொதுவாக சுவாமி எத்தைகைய பணியை மேற்கொண்டாலும் அப்பணி ஆன்மீக சாட்சாத்காரத்தை நோக்கி பக்தர்களைக் கொண்டு செல்லும்பொருட்டே செய்யப்படும். லௌகீகக் காரியங்கள் போல சுவாமியின் காரியங்கள் தோற்றமளித்தாலும் அவை முழுக்க முழுக்க ஆன்மீகப் பணிகளே ஆகும்.

ஒரு பெரும் தொழிலதிபர் சுவாமியைத் தேடி தேரடி மண்டபத்திற்கு வந்தார். அவரின் தொழில்கள் யாவும் முற்றிலும் நசிந்து முழுகி விடும் நிலையில் அச்சமயம் இருந்தது.

அந்த பெரும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள எவ்வளவோ முயன்றும் அவரால் எதுவும் செய்யமுடியவில்லை.

அவர் மனம் நொந்து விரக்தியாக ஊர் ஊராகச் சென்று, சாதுக்களையும், சந்நியாசிகளையும், ஞானிகளையும், தரிசித்துக், கொண்டிருந்தார்.

அவர் தரிசனம் செய்த எவரும் அவருக்கு ஆறுதலும், அமைதியும் தரமுடியவில்லை. முடிவில் அவர் சுவாமியிடம் வந்து சேர்ந்தார்.

சுவாமியின் பரிபூர்ணத்துவம் அவரை மிகவும் கவர்ந்தது. சுவாமியின் பேரானந்தப் பெருஞ்சிரிப்பு அவரின் மனதில் நம்பிக்கையையும், அமைதியையும் அளித்தது. சுவாமியை சரணாகதி அடைந்தார்.

சுவாமி அவருக்காகவே காத்திருந்தார் போலும். தன் முழு கவனத்தையும் அவர் மேல் செலுத்தினார். தன் நாமத்தை அவருக்குத் தீட்சையாக, அளித்தார்.

அந்த தொழிலதிபர் சுவாமியை மீண்டும் மீண்டும் தரிசனம் செய்யலானார்.

அவர் வரும் சமயமெல்லாம், சுவாமி அவரைத் தன்னோடு பல நாட்கள் இருக்க வைத்தார்.

அங்கே, ஊரில் குறுகிய காலத்தில் தொழில்கள் விசித்திரமாக, பெரும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் கண்டன.

முழுகி விடும் நிலையில் இருந்த அவரின் தொழில்கள் யாவும் திடீரென லாபகரமாக செயல்பட்டன. எல்லா திசைகளிலுமிருந்தும் பணமழை பெருமழையாகப் பெய்தது.

ஆனால் அந்தத் தொழிலதிபர் மனதில் அவருக்கு பிடித்த அந்தத் தொழில்கள் இப்பொழுது வினோதமான காட்சிப் பொருளாகப், போனது. தொழிலின் வளர்ச்சி அவரின் ஆன்மீக வளர்ச்சிக்கே, வித்திட்டது.

சுவாமியின் அருளால் அவரிடமிருந்த பற்று மற்றும் ஆசைகள் பறிக்கப்பட்டது.

சுவாமியின் மீது அவர் கொண்டிருந்த பக்தியும், நம்பிக்கையும் ஆழ்மனதில் அவரின் ஜீவனோடு, கலந்து நிலை பெற்றது.

சுவாமியே அவரின் வாழ்க்கையானார். சுவாமியை மட்டுமே அவர் இவ்வுலகில் கண்டார். சுவாமியின் சொற்களே அவர் செவிகள் கேட்டது. சுவாமியைப் பற்றி மட்டுமே அவரால் பேச முடிந்தது. சுவாமியே அவரின் சுவாசமும் ஆனார். சுவாமியை தவிர்த்து அவர் வேறு எதையும் சிந்திக்க இயலாமல் போனது.

ஆனாலும் அவரின் தொழில்கள் மென்மேலும் வளர்ந்து பெருகியது. பல கோடிகள் வருமானம் வந்தாலும், அது அவரை எவ்வகையிலும் பாதிக்கவேயில்லை.

அவர் சுவாமியுடனேயே இருந்தார். இல்லை இல்லை சுவாமிதான் அவருடன் அனுக்கணமும் பிரியாது இருந்தார். சுவாமியும் அவரும் ஒன்றானார்கள். சுவாமி அவரைத் தன்மயமாக்கிக் கொண்டார். அவரின் ஜீவன் சுவாமியின் திருவடியில் கரைந்தது.

தனம் தந்து, பற்றறுத்து சுவாமி அவருக்கு அனுக்கிரஹம் செய்தார்.

இது ஒரு பக்கமிருக்க இருந்த தனத்தையெல்லாம் பிடுங்கி சுவாமி ஒரு பக்தரை தன்மயமாக்கியதை மற்றொரு சமயம் காண்போம்.

யோகி ராமசுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா.

– S. Parthasarathy

Source of this Miracle – https://www.facebook.com/parthasarathy.sannasi

Leave A Comment