தீராத விளையாட்டுப் பிள்ளை
1982ல் திருவண்ணாமலையில் சிவகாசி நாடார் சத்திரத்தில் மூன்று குடும்பங்கள் தங்கியிருந்தனர்.
யோகி ராம்சுரத்குமார் சுவாமியும் அவர்களுடன் சில நாட்களாகத் தங்கியிருந்தார். சுவாமி ஏழாம் எண் அறையிலும் குடும்பத்தார் அதே முதல் தளத்தில் வெவ்வேறு அறைகளிலும் தங்கியிருந்தனர். எனினும் பெரும்பாலான நேரம் குடும்பத்தார் சுவாமி இருந்த அறையிலேயே கழித்தனர்.
அன்று குடும்பத்துப் பெண்கள் யாவரும் ஒன்றிணைந்து சுவாமி மீது அற்புதமான பாடல் ஒன்றைப் புனைந்திருந்தனர். அப்பாடலை பாரதியாரின் தீராத விளையாட்டுப் பிள்ளை பாடலின் ராகத்தில் அமைத்திருந்தனர்.
பாடல் பயிற்சிகள் முடிந்ததும் அவர்கள் சுவாமியிடம் வந்து அப்பாடலை சுவாமி முன் பாட அனுமதி கோரினர்.
சுவாமி அனுமதி அளித்தார். மேலும் அப்பாடலை அவர்கள் பாடும்போது அதை ஒலிநாடாவில் பதிவு செய்யவும் ஆண்களைக் கேட்டுக் கொண்டார்.
ஆண்கள் ஒலிப்பதிவுக் கருவியுடன் தயாராயினர். பெண்கள் பாட ஆரம்பித்தனர். சுவாமியின் கல்யாண குணங்களைப் பற்றி அற்புதமாக அப்பாடல் புனையப்பட்டிருந்தது.
சுவாமியின் தெய்வீகத் தன்மை, சுவாமியின் அருள் கடாட்சம், சுவாமியின் பேரன்பு என பல்வேறு விதங்களாக சுவாமியை வர்ணனை செய்து அப்பெண்கள் பாடினர். சுவாமி அப்பாடலை வெகுவாக ரசித்து மகிழ்ந்தார்.
இதைக் கண்ணுற்ற ஆண்களுக்குத் தாங்களும் பாடல் எழுத வேண்டும் என்ற ஆசை பிறந்தது. சுவாமியிடம் அனுமதி கேட்டனர். சுவாமியும் சம்மதித்தார்.
நண்பர்கள் சற்று நேரத்திலேயே பாடலை அதே ராகத்தில் எழுதி முடித்தனர். சுவாமி முன் பாடலைப் பாட நண்பர்கள் அனுமதி கோரினர். சுவாமி அனுமதித்தார். அவர்கள் பாடலையும் ஒலிப்பதிவுக் கருவியில் ஒலி நாடாவில் பதிவு செய்யுமாறு சுவாமி நண்பர்களைக் கேட்டுக் கொண்டார். ஒலி நாடா தயாராகியது.
நண்பர்கள் பாட ஆரம்பித்தினர். பாடல் வித்தியாசமாக இருந்தது. பாடலில், பரப்பிரம்மமான சுவாமி தன்னை பிச்சைக்காரன் எனச் சொல்லும் பொய்யன் என்றும், பக்தர்களின் இதயங்களை அவர்கள் அறியாமலே திருடும் கள்வன் என்றும், உன்னதமான புனித ஆத்மாவாக இருந்தும் தான் ஒரு அழுக்கடைந்த பாவி எனச் சொல்லும் கபடதாரி என்றும், பலவாறாகச் சுவாமியைச் சாடுவது போல் வர்ணிக்கப்பட்டிருந்தது.
பாடல் முடிந்தது. சுவாமி பெரும் வியப்புடன் நண்பர்களைப் பார்த்தார்.
அந்த இரண்டு பாடல்களையும் ஒலி நாடாவில் மீண்டும் கேட்க சுவாமி விரும்பினார்.
ஒலி நாடா இயக்கப்பட்டது. இரண்டு பாடல்களும் நன்கு பதிவாகியிருந்தது. சுவாமி மீண்டும் ஒலி நாடாவை இயக்கச் சொன்னார். சுவாமி தனது வலது கரத்தை அந்தக் கருவியின் மேல் வைத்தார். பெண்கள் பாடிய பாடல் ஒலித்து முடிந்தது. சற்று நேரத்தில் ஆண்கள் பாடும் பாடல் வரவேண்டும். அனைவரும் காத்திருந்தனர். நேரம் கடந்து கொண்டே இருந்தது. ஆண்கள் பாடிய பாடல் வரவே இல்லை. ஒலி நாடாவும் முடிந்து போய் நின்று விட்டது.
கருவியில் கோளாறு ஏற்பட்டிருக்குமோ என்று நினைத்து நண்பர்கள் பலமுறை முயன்றும் ஆண்கள் பாடிய பாடல் வரவே இல்லை. அனைவரும் வியப்புடன் சுவாமியைப் பார்த்தனர்.
“என் தந்தை காப்பாற்றிவிட்டார். நண்பா, சில விஷயங்களை நமக்குள் பகிர்ந்து கொள்ளலாம். இந்த மாதிரியான சொற்களை பிற நண்பர்கள் கேட்டால் அவர்கள் எதிர்மறையாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே என் தந்தை அந்தப் பாடலைத் தன்னோடு எடுத்துக் கொண்டார். என் தந்தையின் கருணையினாலேயே அனைத்தும் நடக்கிறது. இனி இது போன்ற பாடல்களை எழுத வேண்டாம் நண்பா.”
சுவாமியின் எண்ணம் நன்கு புரிந்தது.
அந்தப் பாடலை எழுதியிருந்த பேப்பரும் காணாமல் போய்விட்டது.
யோகி ராமசுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா
Source – https://www.facebook.com/parthasarathy.sannasi