பெரும் தனத்தை இழக்க வைத்தும், குருவின் திருவடியே சாசுவதம் என வாழக் கற்பித்த சுவாமியின் நினைவாகவே அவரின் வாழ்வு சுவாமியின் திருவடியில் கரைந்தது.
நமது சுவாமி யோகி ராம்சுரத்குமாருக்குத் தான் எத்தனை விதமான பக்தர்கள், அடியவர்கள், சாதகர்கள்.
சுவாமியிடம் சரணாகதி அடைந்து முக்தி பெற்ற பக்தர்கள் பலர் உலகின் பார்வையில் படாமல் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள்.
இத்தகைய அடியவர்கள் நம் மத்தியில் எளிமையாக வாழ்ந்து எளிமையாக இறையடி சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவரைப் பற்றி இன்று நாம் தெரிந்து கொள்வோம்.
அந்த அம்மையார் பிறந்த இடமும் புகுந்த இடமும் செல்வச் செழிப்பான குடும்பங்கள். ஒரே பெண் பிள்ளையாக இருந்ததால் பிறந்த வீட்டில் செல்லமாக வளர்ந்தவர்.
தெய்வ வழிபாடுகள் செய்கின்ற குடும்பமாக இருந்தாலும் ஞானியர் பற்றி அறியாத குடும்பச் சூழலில் வளர்ந்தவர். தேவாரம் திருவாசகம் என சைவ சித்தாந்த நூல்களில் ஒரளவு பரிச்சயமானவர்.
அவர் புகுந்த வீடும் அவ்விதமே. சைவ சித்தாந்தங்களைச், சிறுவயது முதலே கற்றவர்கள்.
அம்மையாரின் கணவர் மட்டும் ஞானிகளை இனம் கண்டு, அவர்களைத் துதித்து வாழும் மரபில் விருப்பமுடையவராக இருந்தார்.
அம்மையாரின் கணவர் மிகப் பெரும் செல்வந்தர். தான் வாழ்ந்த குறைவான காலத்திலேயே தன் மனைவிக்கு நம் சுவாமியை அறிமுகப்படுத்தினார். சுவாமியிடம் தன் மனைவியையும் குழந்தைகளையும் மானசீகமாக ஒப்படைத்துவிட்டு சுவாமியின் திருவடிகளில் கரைந்து, மறைந்து போனார்.
எளிமையான, கள்ளங்கபடமற்ற, அந்த அம்மையார் கணவரின் திடீர் மறைவில் நிலைகுலைந்து போனார்.
பெரிய பெரிய நிறுவனங்களை நிர்வகித்து வந்த கணவரின் மறைவிற்குப் பின் அந்த அம்மையார் செல்லும் திசையறியாது திகைத்து நின்றார்.
சுவாமியே கதியெனச் சரணடைந்தார். சின்னஞ்சிறு குழந்தைகளுடன் சுவாமியே துணையெனத், தைரியமாக வாழ்ந்து வந்தார்.
கணவர் நிர்வகித்து வந்த நிறுவனங்களை கணவரின் நெருங்கிய சொந்தங்கள் கைப்பற்றின.
சுவாமியின் வழிகாட்டுதல்படி அந்த அம்மையார் நிறுவனங்களையும், இதர பங்குகளையும், தன் மாமனார், மாமியார் சொன்னபடியே சொந்தங்ளிடம் ஒப்படைத்தார்.
தன் பிள்ளைகள் படித்து முடித்து வந்தபின் உரிய காலத்தில் நிறுவனங்களையும், சொத்துக்களையும், பங்குகளையும் தன் பிள்ளைகள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதுவரை அம்மையாருக்குத் தேவையான பணத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் சொன்னது.
முதல் சில ஆண்டுகள் எல்லாமே சரியாக நடந்து வந்தன. சொந்தங்களின் உதவியோடும், சுவாமியின் வழிகாட்டுதல்படியும் குழந்தைகளின் திருமணங்கள் நடந்தேறின.
காலப்போக்கில் சொந்தங்களின் மனதில் துர் எண்ணங்கள் தோன்றியது.
அம்மையாரிடம் பற்பல காரணங்களைக் கூறி அவரிடம் பல பத்திரங்களில் கையெழுத்து பெற்று நிறுவனங்களின் பங்குகளையும், சொத்துக்களையும் சொந்தங்கள் அபகரித்துக் கொண்டனர். அவருக்குக் கொடுக்கப்பட்ட மாதாந்திர பணமும் நிறுத்தப்பட்டது. அம்மையார் நிலைகுலைந்து போனார்.
கணவர் மரணத்திற்குப்பின், திருவண்ணாமலை சுவாமியிடமே, அவரின் வாசம் அதிகமாக இருந்தது.
சுவாமியின் வழிகாட்டுதல்படி எளிமையான சத்திரத்தில் சில காலம் தங்கியும், பின்னர் ஆசிரமம் கட்டிய பின் சுவாமி, அவருக்கெனக் கொடுத்த தனி குடிலில் அவரும், அவரது தோழிகளும் வாசம் செய்தனர்.
குழந்தைகளின் திருமணத்திற்குப்பின் அவர் முழுநேர திருவண்ணாமலைவாசியானார். சுவாமி அவரை தனது நேரடியான கண்காணிப்பில் வைத்திருந்தார்.
சுவாமியின் கருணையின் தாக்கத்தினால் அம்மையார் பொருள் இழப்பினால் ஏற்பட்ட துக்கத்திலிருந்தும், முற்றிலும் விடுபட்டார்.
சுவாமியின் அருளால் அவர் தன்னைப் பிணைத்திருந்த, வாழ்க்கைத் தளைகளில் இருந்தும் விடுதலை அடைந்தார்.
ஒரு நிறுவனத்தின் சொற்ப பங்குகளே அப்போது அவரின் கையிருப்பு. அப்பங்குகளையும் விற்றுவிட அவரின் பிள்ளையும், உறவினர்களும் வற்புறுத்தினர். சுவாமியிடம் அம்மையார் இது விஷயமாக கேட்க, சுவாமி அந்த பங்குகளை விற்க கூடாது என உறுதியாகச் சொல்லிவிட்டார்.
சுவாமியின் வாக்கின்படி அம்மையார் அப்பங்குகளை விற்க மறுத்துவிட்டார்.
ஒரு சில மாதங்களில் அப்பங்குகள் ஈட்டித் தந்த ஈட்டுத் தொகை அவரின் செலவிற்குச் சரியாக இருந்தது.
காலம் கடந்தது. சுவாமியின் திருவருளினால் அம்மையார் பற்றற்றுப் போனார். அவரின் தங்க வைர நகைகள் யார் யாருக்கோ கொடுக்கப்பட்டன. அவருக்கு வந்த பணமும் கேட்போர்க்கெல்லாம், தானமாக கொடுக்கப்பட்டது.
எந்த ஒரு செயலோ, எண்ணமோ, சொல்லோ அவருக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவரிடம் பேரமைதி குடிகொண்டது.
சுவாமி சித்தியடையுமுன், இந்த அற்புத பக்தையை இப்பிறவி படுத்தும்பாட்டிலிருந்து முக்தி அடையச் செய்தார். அம்மையாருக்கு சுவாமி, சுவாமியின் சொற்கள், சுவாமி பற்றிய பாடல்கள் மட்டுமே வாழ்வானது.
தான் இழந்த செல்வத்தை நினைத்தோ, சொந்தங்களை நினைத்தோ, தன் எதிர்காலம் குறித்தோ கொஞ்சமும் கவலைப்படாமல் பற்று முற்றும் விடுபட்டவராய், வாழ்ந்தார்.
அநேக உடல் உபாதைகள் அவரை அவதிப் படுத்தினாலும் அவையும் சுவாமி அருளிய வரமென, வாழ்ந்தார்.
பேரமைதி அவருக்கு சுவாமியின் அருளால் சித்தித்தது. சிறு குழந்தை போல் சுவாமியின் பேரருள் அவரை மாற்றியது.
அமைதியாக சுவாமியின் நினைவாகவே அந்த அம்மையார் சுவாமியின் திருவடி சேர்ந்து மறைந்தார்.
பெரும் தனத்தை இழக்க வைத்தும், குருவின் திருவடியே சாசுவதம் என வாழக் கற்பித்த சுவாமியின் நினைவாகவே அவரின் வாழ்வு சுவாமியின் திருவடியில் கரைந்தது.
தனம் தந்து அடியவரைப் பற்றற்ற பெருவாழ்வு வாழ வைத்த நம் சுவாமி, இருந்த தனமனைத்தும் பறித்து, தன்னையே கதியென வாழ்ந்த அந்த எளிய அடியவரை, ஆட்கொண்ட பேரருள் கண்டு வியந்து சுவாமியின் திருவடிகளை விம்மித் தொழுகின்றேன்.
அந்த அம்மையார் இழந்த சொத்துக்களின் இன்றைய மதிப்பு சுமார் முன்னூறுகோடி இருக்கும்.
– S. Parthasarathy
Source of this Miracle – https://www.facebook.com/parthasarathy.sannasi