Miracles admin  

1977ம் வருடம். டிசம்பர் மாத முதல் தேதிக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தது.

1977ம் வருடம். டிசம்பர் மாத முதல் தேதிக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தது.

டிசம்பர் முதல் தேதி சுவாமி யோகி ராம்சுரத்குமாரின் ஜெயந்தி தினம்.

போன வருடம் அவன் இந்நேரம் சுவாமியின் சந்நதியில் இருந்தான். பெரும்பாலான நேரங்களில் அவன் சுவாமிக்குப் பக்கத்திலேயே அப்போது சுவாமியால் அமர வைக்கப்பட்டிருந்தான்.

சுவாமி அவன் கரத்தை தன் திருக்கையால் பிரியமுடன் வருடியபடி இருந்தார்.

பக்தர்கள் கூட்டம் அன்று பெருமளவு இருந்தது. அவன் சுவாமியின் அருகில். அவன் உள்ளம் ஆனந்தத்தில் அடங்கியிருந்தது. வெட்கத்தில் முகம் சிவந்து இருந்தது.

அவன் அந்த ஆசனத்திற்கு தகுதியுற்றவனா என அவனால் அறிய முடியவில்லை.

இன்று போன வருடம் நடந்த காட்சிகள் மனதில் நிழலாடி கண்களில் நீர் வரவழைத்தது.

அவன் சுவாமியிடம் செல்ல விரும்பினான். எப்படிச் செல்வது? கையில் செப்புக்காசு கூடக் கிடையாது. திருவண்ணாமலையோ 200 கி.மீ. தூரம். பணமில்லாமல் எப்படிப் போகமுடியும்?

அவன் யோசித்தான். ஒரு வழியும் புலப்படவில்லை. அவன் பார்வை ஒரு பொருளை குத்திட்டுப் பார்த்தது.

அவனுக்கு அடைக்கலமடைத்திருந்த வியாபார அலுவலகத்தின் சைக்கிள்தான் அது. யாருக்கும் தெரியாமல் அதை எடுத்துச் சென்றுவிட்டால் என்ன? ஒரளவு ஓடக்கூடிய சைக்கிள்தான். 200 கி.மீ. தூரம் ஓடிவிடும்.

ஆனால் அது திருட்டு இல்லையா? அதெல்லாம் பிற்பாடு யோசித்துக் கொள்ளலாம். திருவண்ணாமலை சென்று வந்தபின் உடையவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் போயிற்று. அட இரண்டு அடி கூட வாங்கிக் கொள்ளலாமே.

எப்படியும் சுவாமியைப் பார்க்க வேண்டும். அவன் முடிவெடுத்து விட்டான். மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் புறப்பட்டுவிடவேண்டியதுதான். அவன் மனது சற்றே அமைதி அடைந்தது.

அப்போது தொலை பேசி மணி ஒலித்தது. இரவு ஒன்பது மணி இருக்கும். அவன் தொலை பேசியை எடுத்தான். மறு முனையில் சுவாமியின் தீவிர பக்தர்.

“தம்பி நீங்கள் திருவண்ணாமலை செல்லப் போகிறீர்களா?”

“ஆம், போகலாமென நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.”

“நானும் குடும்பத்தோடு போகலாமென டிக்கெட் எல்லாம் முன்பதிவு செய்து வைத்துவிட்டேன். ஆனால் என்ன துரதரிஷ்டமோ தெரியவில்லை. என் மகனுக்கு அம்மை நோய் வந்துள்ளது. எனவே குடும்பத்தோடு செல்ல முடியாது. நானும் தனித்து திருவண்ணாமலை செல்ல முடியாது. நான் எப்போது திருவண்ணாமலை வந்தாலும் குடும்பத்தோடு, மனைவி மக்களோடு தான் வரவேண்டும் என சுவாமி சொல்லியிருக்கிறார். எனவே என்னிடமிருந்த ஐந்து பஸ் டிக்கெட்டில் நான்கை நண்பர்களுக்கு கொடுத்துவிட்டேன். இன்னும் ஒரு டிக்கெட் மீதம் உள்ளது. உங்களுக்குத் தேவையானால் டிக்கெட்டை உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

அந்த பக்தரின் சொற்கள் அவனுக்கு பரமானந்தம் அளித்தது. அன்று அவன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

“அனுப்பிவையுங்கள் அண்ணா” என்றான்.

அடுத்த அரைமணி நேரத்தில் டிக்கெட் வந்து சேர்ந்தது. இரவு நேர பஸ் அது.

இரவு பதினொன்று மணிக்கு பஸ் நிலையம் சென்றான். இரவு பன்னிரண்டு மணிக்கு பஸ் புறப்பட்டது. காலை ஆறு மணிக்கு பஸ் திருவண்ணாமலை வந்து சேர்ந்தது.

பஸ் நிலையத்தில் இருந்து சந்நிதித் தெரு வீட்டிற்கு விரைந்தான். வீட்டின் இரும்புக் கதவைத் தட்டினான்.

சுவாமியே உள்ளிருந்து வெளியே வந்தார். சுவாமியின் முகமலர் பெருமகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது. அவன் கையைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றார். தன் அருகே பாயில் அமரவைத்தார்.

“அப்பா உன்னை எப்படியோ அழைத்து வந்துவிட்டார் பார்த்தாயா?”

சுவாமி அவன் கரத்தைப் பற்றியபடி கூறினார்.

சுவாமியின் கண்கள் விஷமச் சிரிப்பு சிந்தியது. அவன் கண்களில் கண்ணீர் வடிந்தது. சுவாமி அவனை ஆசுவாசப்படுத்தினார்.

அவன் இன்று ஒரு விலை உயர்ந்த ஆடம்பரக் காரில் போய்க்கொண்டிருக்கின்றான்.

அன்று நடந்த காட்சிகளெல்லாம் இன்று அவன் கண் முன்னே படர்ந்து விரிந்தது. நீர்த் திவலைகள் அவன் பார்வையை மறைக்கின்றது.

சாலையின் ஓரமாக தன் காரை நிறுத்தினான். கண்களைத் துடைத்துக் கொண்டான்.

அவன் ஏதோ முணுமுணுத்தான். ஆஹா அது சுவாமியின் நாமம்.

“யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார், யோகி ராம்சுரத்குமார், ஜெய குருராயா,” எனும் நாம மந்திரம்தான்.

அவன் மீண்டும் காரைச் செலுத்திக் கொண்டு செல்கின்றான். அவனின் நாவும் மனதும் விடாது சுவாமியின் நாமம் சொல்லிக்கொண்டே இருக்கின்றது.

Source – https://www.facebook.com/parthasarathy.sannasi

Leave A Comment