Miracles admin  

1980களின் ஆரம்பம். சுவாமி யோகி ராம்சுரத்குமார் அவர்களுடன் இரவிலும், பகலிலும், நாள்கணக்கில் கழித்த உன்னதமான காலம்.

1980களின் ஆரம்பம். சுவாமி யோகி ராம்சுரத்குமார் அவர்களுடன் இரவிலும், பகலிலும், நாள்கணக்கில் கழித்த உன்னதமான காலம்.

எந்தவிதமான சம்பிரதாயங்களோ, சடங்குகளோ இல்லாது சுவாமியுடன் நகர்வலம் வந்த காலம்.

உள்ளத்தில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது, சிந்தனைகளோ, கவலைகளோ, எண்ணங்களோ சிறிதும் இல்லாது பேரின்ப அமைதியோடு, சுவாமியின் கைப்பிடியில் மயங்கியிருந்த காலம்.

அன்று அண்ணாமலையார் கோவிலுக்கு சுவாமி எங்களை அழைத்துச் சென்றார்.

கோவில் தரிசனம் முடித்து, ராஜகோபுரம் வழியாக சுவாமி எங்களை அழைத்துச் சென்றார்.

தேரடி வீதி வந்தது. பெரிய தேரின் அருகே ஒரு பொரி வியாபாரி, பெரிய பொரி மூடையுடன் அமர்ந்திருந்தார். சுவாமி அவர் எதிரில் சென்று வீதியில் இருகால்கள் வளைத்துக் குந்தியமர்ந்தார். என் கையை விடுவித்தார்.

“பொரி என்னா விலை தம்பி?”

சுவாமி விலை விசாரித்தார்.

வியாபாரி விலை சொன்னார்.

“விலை ரொம்பக் கூடிப் போச்சே! சரி எங்கள் எல்லோருக்கும் கால்படி, கால்படி போடுங்க,”

சுவாமி தன் ஜிப்பா பையிலிருந்து பணத்தை எண்ணிக் கொடுத்தார்.

முதலில் சுவாமி தன் ஜிப்பாவின் முன்நுனிப் பகுதியை வளைத்துக் காட்ட வியாபாரி அதில் கால்படி அளந்து பொரியைப் போட்டார்.

சுவாமியுடன் வந்த ஆண்கள் தங்கள் சட்டைகளின் கீழ் பகுதிகளை வளைத்துக் குழி செய்து அதில் பொரியை பெற்றுக் கொண்டார்கள்.

பெண்கள் தங்கள் சேலைகளின் முந்தியில்பொரியை பெற்றுக் கொண்டனர்.

மீண்டும் வீதியுலா தொடங்கியது. சுவாமி பொரியை சாப்பிட்டவாறு நடக்கச் சொன்னார்.

சுவாமியுடன் வந்த நாங்கள் அனைவரும் ஒருவித பிரம்ம மயக்கத்தில் வீதியில் பொரி சாப்பிட்டவாறு வந்தோம்.

தேரடி வீதியும், திருவூடல் வீதியும், சந்திக்கும் இடத்தில் இருந்த ஒரு கடலைக் கடை முன்னே சுவாமி நின்றார்.

“தம்பி எங்கள் எல்லோருக்கும் காராபூந்தியும், பொட்டுக் கடலையும் போடுங்கள்.”

சுவாமி கடைக்காரருக்குக் காசை மிகுந்த சிரமப்பட்டு, ஒரு கையால் பொரி இருந்த ஜிப்பா மூலையை மடித்துப் பிடித்துக்கொண்டு, மறுகையால் ஜிப்பாவின் பையிலிருந்து காசை எடுத்து கடைக்காரரிடம் கொடுத்தார்.

கடைக்காரர் எல்லோரது மடியிலும் பொட்டுக் கடலையும், காராப்பூந்தியும் குத்துமதிப்பாகப் போட்டார்.

மீண்டும் வீதியுலா தொடங்கியது. பொரியையும், பொட்டுக் கடலையையும், காராப் பூந்தியையும் நன்றாகக் கலந்து சுவாமி சாப்பிடச் சொன்னார்.

நாங்கள் ருசித்துச் சாப்பிட்டவாறு சுவாமியுடன் நடந்தோம்.

வீதியில் எங்கள் கண்களில் எவரும் தெரியவில்லை. நாங்கள் சுயப்பிரக்ஞையற்று காணாமல் போய்விட்டிருந்தோம்.

பரப்பிரம்மம் மட்டுமே அங்கே நடை பயின்று கொண்டிருந்தது.

அந்த நாட்கள்………

யோகி ராம் சுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா.

Source- https://www.facebook.com/parthasarathy.sannasi

Leave A Comment