1980களின் ஆரம்பத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பயணம் செய்வதே பெரிய சாதனை என்றிருந்த நேரம் அது
1980களின் ஆரம்பத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பயணம் செய்வதே பெரிய சாதனை என்றிருந்த நேரம் அது.
பேருந்திலோ, ரயில் பயணமோ எதில் சென்றாலும் ஒருவித அச்ச உணர்வு மக்களிடையே வேரூன்றி இருந்த காலம் அது.
சுவாமி யோகி ராம்சுரத்குமாரின் அடியவர் ஒருவர் பஞ்சாப் மாநிலத்திற்கு வியாபார நிமித்தமாக அடிக்கடி சென்றுவர வேண்டிய கட்டாயம் இருந்தது. ஒவ்வொரு முறையும் அவர் பயணப்படும் போதெல்லாம் சுவாமி யோகி ராம்சுரத்குமாரைத் தன் மனத்தில் சிக்கென பிடித்து இருத்தி வைத்துக் கொள்ள பெரு முயற்சி செய்வார்.
பஞ்சாபின் அப்போதைய பயங்கர சூழலுக்குக் காரணமான ஒரு தீவிரவாதியை அந்த அன்பர் அமிர்தசரசில் சந்திக்க நேர்ந்தது. சந்திப்பு அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் நடை பெற்றது. சம்பிரதாயமான சில கேள்வி பதில்கள், அவ்வளவுதான். சந்திப்பு வெகு விரைவில் முடிந்து விட்டது.
அந்த அன்பர் ஊர் திரும்பினார். வழக்கம்போல் சுவாமியைத் தரிசிக்க திருவண்ணாமலை சென்றார்.
“பஞ்சாபில் உங்களது பயணம் பாதுகாப்பாக இருந்ததா?”
சுவாமி வினவினார்.
“சிறிது பயமிருந்தது சுவாமி. ஆனாலும் சமாளிக்க முடிந்தது சுவாமி.”
அன்பர் பதிலுரைத்தார்.
பின்னர், தான் அந்த தீவிரவாதியைச் சந்தித்ததை அன்பர் சுவாமியிடம் விவரித்தார். சுவாமி அன்பர் கூறியதை மிகுந்த கவனத்துடன் கேட்டார்.
பின் நீண்ட நேரம் அங்கு ஆழ்ந்த மௌனம் நிலவியது. சுவாமி அடுத்தடுத்து விடாமல் சிகரெட் புகைத்தவண்ணம் இருந்தார்.
“நண்பா, நீங்கள் பஞ்சாபில் பயணம் செய்யும்போது ஏதேனும் ஆபத்து ஏற்படுகையில், இந்த பிச்சைக்காரனை நினைவு கூர்ந்தால், இந்த பிச்சைக்காரன் தன் சரீரத்தைத் தூக்கிக்கொண்டா உங்கள் உதவிக்கு ஓடி வருவான்? இல்லை நண்பா. என் தந்தை உங்கள் உதவிக்கு, தகுந்த ஜீவன் எவரையாவது அங்கே உடனடியாக உங்களைப் பாதுகாக்க அனுப்புவார். என் தந்தை எங்கும் நிறைந்தவர். எல்லா சொரூபமும் அவரது அனந்த சொரூபமே. நீங்கள் என் தந்தையை நினைவுகூர்ந்தால் போதும். என் தந்தை உங்களைக் காப்பதற்கு தகுந்த ரூபமெடுத்து ஓடோடி வருவார் “.
சுவாமி மெதுவாகப் பாட ஆரம்பித்தார்.
“யோகி ராம்சுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா “.
அங்கே அமர்ந்திருந்த அனைவரும் சுவாமியைப் பின்தொடர்ந்து பாடினர். தெய்வீகமும் பக்தி பரவசமும் அங்கே ஒருங்கே சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருந்தது.
இந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு மாத காலத்தில் அந்தத் தீவிரவாதி அரசாங்கம் எடுத்த ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டார்.
Source – https://www.facebook.com/parthasarathy.sannasi