2000ம் ஆண்டு, டிசம்பர் மாதம் மத்தியில் சுவாமி யோகி ராம்சுரத்குமார் தனது பக்தர்களுக்கு கடைசி பொது தரிசனம் தந்து அருளினார்.
2000ம் ஆண்டு, டிசம்பர் மாதம் மத்தியில் சுவாமி யோகி ராம்சுரத்குமார் தனது பக்தர்களுக்கு கடைசி பொது தரிசனம் தந்து அருளினார்.
அவரது அறையிலிருந்து சுவாமியை நகரும் படுக்கையில் ஆசிரமத்தின் பெரிய கூடத்தில் உள்ள மேடைக்கு சில தொண்டர்கள் அழைத்து வந்தார்கள். சுவாமியின் உடலில் சொருகியிருந்த மருத்துவ உபகரணங்களோடு சுவாமியை அழைத்து வந்தார்கள்.
மேடையின் நடுவில் நகரும் படுக்கையை நிறுத்தினார்கள். சில நிமிடங்கள் சுவாமி தன் முன்னால் குழுமியிருந்த பக்த பெருமக்களைக் கருணையோடு பார்த்தார். சுவாமியின் நிலையை நேரடியாகப் பார்த்த பக்தர்களின் கண்களில் கண்ணீர் வடிந்தது. வேதனைப் புலம்பல்களையும், விசும்பல்களையும் அங்கே கேட்க முடிந்தது.
சில நிமிடங்கள் கரைந்தன. சுவாமி தொண்டர்களை மீண்டும் தன் அறைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.
தொண்டர்கள் நகரும் படுக்கையை சுவாமியின் அறைக்குத் தள்ளிச் சென்றனர்.
“இந்த பிச்சைக்காரன் நீண்ட தூக்கம் கொள்ள விரும்புகிறான்.” (“This beggar would like to have a long sleep.”)
சுவாமி இதே சொற்களை இரண்டு முறை கூறினார். உடன் சென்ற தொண்டர்களின் உயிர் சிலிர்த்தது.
அதன்பின் பக்தர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகச் சென்றது.
சுவாமி தீர்மானித்தபடி சுவாமியின் சரீரத்தின் ஒவ்வொரு முக்கிய பாகமும் தளர்வடைந்து செயல்பாட்டை நிறுத்தியது. முதலில் சிறுநீரகம். அதற்கு சிகிச்சை, பின் மற்ற அவயவங்கள். பல கருவிகள் பொருத்தப்பட்டன. சுவாமியை விசாலமான அறைக்கு மாற்றினார்கள்.
அந்த அறையில் இருந்த பெரிய ஜன்னல் வழியாக பக்தர்கள் சுவாமியை தரிசிக்க ஏற்பாடு செய்தார்கள்.
உடலில் பலவித ஊசிகள் சொருகி இருந்ததால், சுவாமி அவற்றை அகற்றாமல் இருக்க அவரது கரங்களை மென்மையான துணியினால் இலேசாக கட்டி வைத்திருந்தனர். இருந்த போதிலும் சுவாமி தனது பிரியமான பக்தர் ஜன்னல் வழியாகத் தன்னை கைகூப்பி தரிசித்தபோது, கட்டப்பட்டிருந்த தன் கரங்களை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தி ஆசி அளித்தார்.
2001ம் ஆண்டு ஜனவரியில் சுவாமி தனது பிரியமான பக்தரை இரண்டு நாட்களாக அவர் பெயரைக் கூறியவாறே நினைவு கூர்ந்தார். சுற்றி இருந்த தொண்டர்கள், அந்த பக்தரை காண வேண்டுமா, என கேட்க, “ஆமா,” என்று ஒற்றைச் சொல்லில் பதிலளித்தார்.
அந்த நண்பர், வரவழைக்கபட்டார். அந்த நண்பனைக் கண்ட சுவாமி ஆனந்தமாகச் சிரித்தார்.
“இங்கே வந்ததற்கு நன்றி நண்பா,” சுவாமியின் கரம் நண்பனின் கரத்தைப் பரிவோடு பற்றி ஆசி அளித்தது. அதன்பின் சுவாமி யாரிடமும் உரையாடவில்லை. அந்த நண்பன் சுவாமியின் சரீரத்தின் கடைசி சுவாசம் வரை உடன் இருந்தான்.
சுவாமி தன் இறுதி நாட்களில் “கோமா” என்ற மயக்க நிலையில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் சுவாமியின் உணர்வுகள் ஒரு நொடி கூட ஓய்ந்திருக்கவில்லை. அது தனது தந்தையோடு ஒன்றி இருந்தது. பூரண விழிப்போடு இருந்தது.
2001ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி மறைந்தது.
எங்கோ வடக்கில் பிறந்து, தெற்கே திருவண்ணாமலையில் நமக்காக, நம்மை உய்விப்பதற்காக வந்த அந்த உத்தம அவதார புருஷரை நம் உள்மனதில் பிரதிஷ்டை செய்து அவர் நினைவாகவே வாழ்வதைவிட வேறு தவம் ஏதுமுள்ளதா?
யோகி ராம்சுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா.
Source – https://www.facebook.com/parthasarathy.sannasi