Miracles admin  

ஸ்வாமியின் அரவணைப்பில் பக்தர்கள்

அந்த மத்திய வயது தம்பதிகள் சமீப காலமாக யோகி ராம்சுரத்குமார் சுவாமிகளை அறிந்திருந்தார்கள்.

மனைவிக்கு சுவாமியின் மீது அதீத பக்தி. கணவருக்கோ சுவாமி ஒரு சாதாரண மானுடர். சில அமானுஷ்ய சக்திகள் அவரிடம் இருக்கலாம். அதன் காரணமாக, சுவாமியை தெய்வத்திற்கு நிகராக பாவிப்பதோ, பக்தி செலுத்துவதோ, திருவடிகள் பணிந்தெழுவதோ அவசியமற்றது, அளவிற்கு அதிகமானது என்பது அவரின் எண்ணம்.

மனைவிக்கோ சுவாமியே குரு, தெய்வம், சகலமும்.

மனைவி சுவாமியை திருவண்ணாமலை சென்று தரிசிக்க வேண்டும் என்று தன் ஆவலை வெளிப்படுத்தும்போதல்லாம் கணவர் வேண்டா வெறுப்பாக மனைவியை திருவண்ணாமலைக்கு அழைத்துச் செல்வார்.

ஒரு சமயம் கணவனை, மனைவி மிகவும் வற்புறுத்தி திருவண்ணாமலை அழைத்துச் செல்லும்படிக் கேட்டார். கணவரோ கோபமடைந்து மறுக்க, கணவன் மனைவியிடையே பெரிய சச்சரவு ஏற்பட்டது.

மனைவி கண்ணீர் மல்க சுவாமியை பிரார்த்தித்தார். இரண்டு நாட்கள் கடந்தன. மனைவியின் கண்ணீர் கணவரைக் கரைத்தது.

“நல்லது. நாம் சுவாமியைக் காணச் செல்லலாம். ஆனால் என்னை அவரின் காலில் விழுந்து வணங்க வற்புறுத்தக் கூடாது. இதற்கு ஒப்புக் கொண்டால் நாம் சுவாமியைப் பார்க்கச் செல்லலாம். என்ன சொல்கின்றாய்?”

கணவர் வினவினார்.

சுவாமியை பார்க்க அழைத்துச் செல்வதாக கணவர் சொன்னது சந்தோஷம் அளித்தாலும், கணவர் சுவாமியை நமஸ்கரிக்க மாட்டேன் எனச் சொன்னது மனைவியின் மனதைச் சுட்டது.

சிறிது நேரம் மனைவி பதிலுரைக்காமல் மௌனமாக இருந்தார். கணவர் பதிலுக்காகக் காத்திருந்தார்.

மனைவி சுவாமியை மனமுருக பிரார்த்தித்தார். சுவாமியின் சிரித்த முகம் அவரை வா என அழைப்பதைப்போல் இருந்தது.

“நீங்கள் உங்கள் இஷ்டப்படி இருந்து கொள்ளுங்கள்‌. நாம் திருவண்ணாமலை செல்லலாம்.”

மனைவி கூறினார்.

மறுநாள் இருவரும் திருவண்ணாமலை வந்தடைந்தனர். சிவகாசி நாடார் சத்திரத்தில் அறை எடுத்தனர். சுவாமியிடம் செல்ல தயாராயினர்.

“இன்று மட்டும் சுவாயின் திருவடியைத் தொட்டு நமஸ்கரித்து விடுங்கள். இதற்குப் பின் நான் ஒரு நாளும் உங்களை வற்புறுத்தமாட் டேன்.”

மனைவி கணவனிடம் கெஞ்சினார்.

“அது ஒரு போதும் நடக்காது. நான் சுவாமி முன் மண்டியிட்டு ஒரு முறை கூட நமஸ்காரம் செய்யமாட்டேன்.”

கணவர் முடிவாக சொல்லிவிட்டார்.

மனைவிக்கு கடுங்கோபம்.

“இப்படிப்பட்ட அகங்காரத்தோடு நீங்கள் சுவாமியைப் பார்க்க வரவே வேண்டாம். நான் மட்டும் சென்று வருகின்றேன்.”

கணவன் முறைத்து நிற்க மனைவி மட்டும் சுவாமியைப் பார்க்க விரைந்தார்.

சுவாமி தேரடி மண்டபத்தில் அமர்ந்திருந்தார். அந்த அம்மையார் கண்களில் நீர் மல்க சுவாமியிடம் சென்று சுவாமியின் பாதம் பற்றி நமஸ்கரித்தார்.

“உங்கள் கணவர் எங்கே அம்மா?”

சுவாமி வினவினார்.

அம்மையார் கண்களில் கண்ணீர் வடிந்தது. அழுதபடியே நடந்ததை சுவாமியிடம் விவரித்தார். சுவாமி அழகாகச் சிரித்தார்.

“உங்கள் கணவரிடம் போய் சொல்லுங்கள் அம்மா. அவர் இந்த பிச்சைக்காரரை நமஸ்கரிக்க வேண்டாம். இந்த பிச்சைக்காரர் அவரின் பாதம் பற்றி நமஸ்கரிப்பார் என்று அவரிடம் சொல்லி அழைத்து வாருங்கள் அம்மா.”

சுவாமியின் சொல்லைக் கேட்ட அம்மையாரின் உடல் நடுங்கியது. உடல் சிலிர்த்து பதறியபடி சுவாமியை மீண்டும் நமஸ்கரித்தார். சத்திரத்திற்கு விரைந்தார்.

அறையில் இருந்த கணவரிடம் நடந்ததைக் கூறினார்.

“ஒரு ஞானி உங்களை கால் தொட்டு வணங்குவேன் எனக்கூறி உங்களை அழைத்து வரச் சொல்லியுள்ளார். இது என்ன பயங்கரம்? இது எதில் போய் முடியுமோ? எனக்கு பயமாக உள்ளது.”

மனைவி கதறி அழுதபடி கூறினார்.

கணவன் பதிலேதும் கூறவில்லை. சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டார். அறைக் கதவைப் பூட்டிவிட்டு மனைவியுடன் சுவாமியைப் பார்க்க விரைந்தார்.

அவர்கள் மண்டபத்தை அடைந்தார்கள்.

எவரும் எதிர்பாராத விதமாக கணவன் சுவாமியின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

அவர் கண்களில் கண்ணீர் பெருகி சுவாமியின் பாதத்தை நனைத்தது. சுவாமி தன் கரங்களை அவரின் முதுகின் மீது வெகுநேரம் வைத்திருந்தார். பின்னர் அவர் முதுகைத் தட்டித் தடவி அவரை ஆசுவாசப்படுத்தினார்.

“இவர் நமஸ்காரம் செய்யமாட்டார் என்று சொன்னீங்களே அம்மா, ஆனால் இவர் எழவே மாட்டேங்கிறாரேமா.”

சுவாமியின் பெருஞ்சிரிப்பு அலையலையாய் வந்து கொண்டேயிருந்தது. மனைவி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

அன்றிலிருந்து அந்த கணவர் சுவாமியைத் தெய்வமாகவே ஆராதித்தார்.

யோகி ராமசுரத்குமரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா.

– S. Parthasarathy

Source – https://www.facebook.com/parthasarathy.sannasi

Leave A Comment