பகவான் எவ்வாறு எல்லா உயிர்களையும் ஒன்றாக பாவித்தார்
1975ம் ஆண்டு. சுவாமி யோகி ராம்சுரத்குமார் திருவண்ணாமலை ரயில் நிலையத்தின் பின்புறமுள்ள ஒரு விவசாய நிலத்தில் கம்பீரமாக, அடர்ந்து நிழல் பரப்பிக் கொண்டிருந்த, ஒரு புன்னை மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தார்.
சுவாமியின் எதிரே புட்டபர்த்தி சாய்பாபாவின் பக்தர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் புட்டபர்த்தியில் சாயிபாபாவைத் தரிசித்துவிட்டு சுவாமியை தரிசிக்க வந்திருந்தார்கள்.
சுவாமி அவர்களின் தரிசன அனுபவங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். பக்தர்கள் பாபாவின் தரிசனத்தில் கிடைத்த பரமசுகத்தை உணர்ச்சிப்பூர்வமாக சுவாமியிடம் விவரித்துக் கொண்டிருந்தார்கள்.
“பாபாவின் ஸ்மரணம் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் பாபா நிச்சயமாக இருப்பார்,” என்று சுவாமி சொல்லி முடிப்பதற்குள் எங்கிருந்தோ ஒரு குட்டி பைரவர் சுவாமியிடம் ஓடோடி வந்தார்.
“இதோ சாய்பாபாவே வந்துவிட்டாரே”, சுவாமி ஆனந்தமாகச் சிரித்தார்.
அந்த குட்டி பைரவர் சுவாமியின் மடியில் உரிமையுடன் அமர்ந்து கொண்டது. குட்டி பைரவரின் நாமமும் சாய்பாபா என்றே ஆனது.
அன்றிலிருந்து பைரவர் தன் இறுதி மூச்சு இருக்கும்வரை சுவாமியை விட்டுப் பிரியவேயில்லை.
பைரவர் சுவாமியிடம் சகல உரிமையும் எடுத்துக் கொள்வார். அவரை யாரும் தடுக்கக்கூடாது. அவர் ஒரு நாளும் பக்தர்களை தொந்திரவு செய்ததில்லை.
சந்நிதித் தெரு வீட்டில் அவர் உரிமையுடன் உள்ளே வருவார். அவருக்குப் பிடித்த பக்தரின் மடியில் படுத்து நிச்சிந்தையாக உறங்குவார்.
பசி எடுத்தால் சுவாமியின் முன் நின்று குரல் கொடுப்பார். சுவாமி அவர் பசியறிந்து ஆகாரம் கொடுப்பார். ஆகாரம் முடிந்தவுடன் அவர் வெளியே திக்விஜயம் செய்ய புறப்பட்டு விடுவார்.
அண்ணாமலையார் கோவிலின் ராஜகோபுரம் எதிரே இருந்த மைதானம், பாத்திர கடை வீதிகள் இவையெல்லாம் பைரவரின் சாம்ராஜ்யம். அதன் எல்லைக்குட்பட்ட இடங்களில் இருக்கும் மற்ற பைரவர்கள் அனைவரும் இவரது ஆளுமைக்குக் கட்டுப்பட்டே இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் போர் மூளும். போரில் எப்பொழுதும் சாய்பாபாதான் வெற்றியடைவார்.
சுவாமிக்கும் பைரவருக்கும் இடையே நடக்கும் சம்பாஷணைகள் மிகவும் சுவாரசியமானதாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் இருக்கும்.
ஒரு முறை நகராட்சியினர் தொல்லை தரும் தெரு நாய்களைப் பிடித்துச் சென்று வதம் செய்தனர்.
நமது பைரவர் எப்படியோ தப்பிச் சென்றுவிட்டார். இரண்டு நாட்களாக அவர் யார் கண்ணுக்கும் புலப்படவில்லை. சுவாமி அவரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு அம்மையார் சுவாமியிடம் வந்தார்.
“சுவாமி என் புருஷன் என்னை ரொம்ப அடிக்கிறார் சுவாமி.”
“சரி”
“சுவாமி அவர் ரொம்பக் குடிக்கிறார் சுவாமி.”
“சரி”
“வீட்ல ரொம்ப கஷ்டம் சுவாமி.”
“சரி”
“நீதான் காப்பாத்தனும் சுவாமி.”
“அட போம்மா. நானே சாய்பாபாவைக் காணாம கஷ்டபடுறேன். நீ வேறே. போய் அண்ணாமலையாருகிட்ட வேண்டிக்கோ. உன் பிரச்சனை எல்லாம் தீர்ந்து போகும். நீங்க போய்ட்டு வாங்க அம்மா.”
அந்த அம்மை சென்றுவிட்டார். சற்று நேரத்தில் சாய்பாபா எங்கிருந்தோ வேகமாக ஓடி வந்து சுவாமி முன் நின்றார்.
சுவாமியிடம் ஓவென ஒரு வித்தியாசமான குரலில் அழுதவாறே நிறையப் பேசினார்.
“ஓ, உங்களைக் கொல்ல வந்தாங்களா சாய்பாபா. உங்களை விரட்டி விரட்டி அடிக்க வந்தாங்களா சாய்பாபா. இனி பயம் வேண்டாம் சாய்பாபா. அப்பா அருள் இருக்கு சாய்பாபா. அப்பா நம்மைக் காப்பாற்றுவார் சாய்பாபா.”
சுவாமி சாய்பாபாவைச் சமாதானப்படுத்தினார். சாய்பாபா உடல் முழுவதும் சாக்கடைக் கறை படிந்து துர்நாற்றம் வீசியது.
“பெருமாள் சாய்பாபாவை நன்கு சோப் தேய்த்துக் குளிப்பாட்டலாம். போங்க சாய்பாபா, போய் குளிச்சிட்டு வாங்க.”
சாய்பாபா பெருமாளோடு சென்றார். பெருமாள் பைரவரை அழுக்கு போக நன்கு குளிப்பாட்டி, உலர்ந்த துணியினால் அதை ஈரம் போகத் துவட்டி சுவாமியிடம் அழைத்து வந்தார்.
பைரவர் சுவாமியின் முன் நின்று ஏதோ குரல் கொடுத்தார்.
“ஓ, பசிக்குதா சாய்பாபா. இரண்டு நாளா சாப்பிடவே இல்லையா. கவலை வேண்டாம் சாய்பாபா. பெருமாள் சாய்பாபாவிற்கு இட்லி கொடுக்கலாம்.”
சுவாமிக்காக ஒரு பக்தர் வாங்கி வந்திருந்த நான்கு இட்லியை பெருமாள் இலையில் பிய்த்துப் போட்டு அதன் மேல் சட்னியையும் சாம்பாரையும் ஊற்றிப் பிசைந்து பைரவர் முன் வைத்தார்.
பைரவர் பசியாற சாப்பிட்டார். பின்னர் சுவாமியின் திருவடியிலேயே படுத்து உறங்கிவிட்டார்.
சுவாமி அன்றே பெருமாளை நகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பி பைரவருக்கு அனுமதிப் பட்டயம் வாங்கி கழுத்தில் கட்டிவிட்டார். பைரவர் மறுபடியும் சுதந்திரமாக வலம் வந்தார்.
சுவாமி பைரவரின் இறுதி நாள்வரை அதை நன்கு பராமரித்தார். அதன் முதுமையில் சிரமப்படும்போது வைத்தியரை வரவழைத்து சிகிச்சை அளித்தார். முடிவில் பைரவர் சுவாமியின் அரவணைப்பிலேயே இறந்து போனார்.
பைரவரை சுவாமி திருவண்ணாமலை ஈசானிய இடுகாட்டில் புதைக்கச் செய்தார்.
பெருமாள் மனிதர்களுக்குச் செய்வது போன்றே பைரவருக்கும் அந்திம சமஸ்காரம் செய்தார்.
சுவாமி இவ்வாறே அனைத்து ஜீவராசிகளையும் காத்து கடைத்தேற்றுகிறார் என்பது சத்தியம்.
யோகி ராம்சுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா.
Source – https://www.facebook.com/parthasarathy.sannasi